நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியதிலிருந்து காங்கிரஸை, முஸ்லிம் மற்றும் பாகிஸ்தானுடன் இணைத்து பா.ஜ.க பிரசாரம் செய்துவருகிறது. குறிப்பாக, ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக மோடி தனது பிரசாரங்களில் கூறிவந்தார். மறுபக்கம், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் (Ch Fawad Hussain) மே 1-ம் தேதி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ராகுல் காந்தியின் பிரசார வீடியோ ஒன்றைப் பதிவிட்டு `Rahul On Fire’ என ட்வீட் செய்திருந்தார்.
பின்னர் மே 4-ம் தேதி, `ராகுல் காந்திக்குள் அவரின் தாத்தாவைப் போலவே ஒரு சோஷலிஸ்ட் இருக்கிறார். சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஒரே மாதிரியான பிரச்னைகள் இருக்கின்றன. ராகுல் காந்தி தனது உரையில் நாட்டில் 70 சதவிகித சொத்துகளை, 30 அல்லது 50 சதவிகித குடும்பங்கள் வைத்திருப்பதாகக் கூறியிருந்தார். பாகிஸ்தானிலும்கூட நாட்டின் 75 சதவிகித சொத்துகளை, பாக் பிஸ்னஸ் கவுன்சில் (Pak Buisness Council) என்ற வணிகக் கழகமும் சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் வைத்திருக்கின்றன. சரியான சொத்துப் பகிர்வு என்பது முதலாளித்துவத்தின் மிகப்பெரிய சவால்’ என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரின் ட்வீட்டுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் அமேதி வேட்பாளருமான ஸ்மிருதி இரானி, எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொல்லும் துப்பாக்கிகள் தொழிற்சாலை அமேதியில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அமேதியில் நேற்று நடைபெற்ற பிரசாரத்தில் இதனைத் தெரிவித்த ஸ்மிருதி இரானி, “இப்போதுவரை காங்கிரஸ் தலைவருடன் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரு பாகிஸ்தான் தலைவர் இப்போது ஸ்மிருதி இரானியை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
உங்களால் முதலில் பாகிஸ்தானை நிர்வகிக்க முடியவில்லை. ஆனால், அமேதியைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். இப்போது நான் கூறுவது பாகிஸ்தான் தலைவரைச் சென்றடையுமெனில் ஒன்றைத் தெரிவித்துக்கொள்கிறேன்… எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொல்ல பயன்படுத்தப்படும் ஏ.கே 203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் மோடி அமைத்திருக்கும் அமேதி இதுதான். மேலும், ராகுல் காந்தியிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்… பாகிஸ்தானுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.