பெங்களூரில் கனமழைக்கு வாய்ப்பு: மஞ்சள் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

பெங்களூரு: பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கடந்த மாதம் முழுக்கவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகவே வெப்பம் பதிவாகி வந்தது. இதனால் பெங்களூர்வாசிகள் பல்வேறு சிக்கலை எதிர்கொண்டனர். கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில், வெப்பம் குறைந்து வருகிறது.

தொடர் மழையைத் தொடர்ந்து, பெங்களூருவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கையானது பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கான சாத்தியத்தை குறிக்கிறது. தொடர் மழையால் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன.

இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முக்கிய பகுதிகள் குறித்து குடிமக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த ஒரு வாரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மழை பெய்யயும் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதன் கிழமை (மே 8) 21 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

வியாழக்கிழமை (மே 9) வெப்பநிலை 22 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மே 10 முதல் மே 13 வரை, வெப்பநிலை 23 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாத காலத்தில் பெங்களூருவில் மழைப்பொழிவு சராசரியாக 128.7 மிமி ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு சராசரி மழையை பெங்களூரு பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன்று மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.