மக்களவை தேர்தலில் வெற்றி பெற எதிர்க்கட்சிகள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக பல்வேறு கட்சிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளியிட்டுள்ளன போலி காணொலிகளை மூன்று மணி நேரத்துக்குள் நீக்கும்படி தேர்தல் ஆணையம் நேற்று கெடு விதித்து உத்தரவிட்டது.
‘டீப் ஃபேக்’ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அண்மைக்காலமாகப் பல போலி காணொலிகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஒரு உருவத்தின் மீது வேறொரு உருவத்தை வீடியோ எடிட்டிங் செய்து பதித்து ஆள்மாறாட்டம் செய்ய முடியும்.
அது மட்டுமின்றி ஒருவருடைய பேச்சை இன்னொருவரின் குரலில் வெளியிட முடியும். மக்களவை தேர்தல் நேரத்தில் இதுபோன்று போலியாகத் தயாரிக்கப்பட்ட பல காணொலிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் டீப் ஃபேக் காணொலிகள் பற்றிய புகார்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது: உண்மைக்குப் புறம்பான, தவறான, திசைதிருப்பக் கூடிய, இழிவுபடுத்தக் கூடிய தகவல்கள் அடங்கிய டீப் ஃபேக் ஒலிப்பதிவு மற்றும் காணொலிகளைத் தயாரித்துப் பகிரும் செயலில் எந்த அரசியல் கட்சியும் ஈடுபடக் கூடாது.
டீப் ஃபேக் ஒலிப்பதிவுகளையும் காணொலிகளையும் இதுவரை வெளியிட்டுள்ள கட்சிகள் அடுத்த மூன்று மணி நேரத்துக்குள் அவற்றை இணையத்திலிருந்து நீக்கும்படி உத்தரவிடப்படுகிறது. இத்தகைய காரியங்களில் ஈடுபடும் கட்சிக்காரர்களையும் கண்டிக்க வேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்ட கட்சிகளுக்கு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.