‘மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன’ – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: “தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின்றனர். ஆனால், அதன் அசல் சூழல் அவர்கள் கூற்றுக்கு மாறாக உள்ளது” என எதிர்க்கட்சியினருக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மோடி தலைமையிலான அரசானது பொதுத்துறை நிறுவனங்களை வளம் பெறச் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

“காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அப்படி கைவிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், மோடி தலைமையிலான அரசின் கீழ் எழுச்சி பெற்றன. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் அதற்கு உதாரணம்.

இந்த நிறுவனங்கள் தொழில்முறை இயக்கத்துடன் செயல்படும் வகையில் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மூலதனம் சார்ந்த விவகாரங்களில் மோடி அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஊடாக பங்குகள் ரீதியான வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாடு, மின்சாரம், தளவாடங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்ற காரணத்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேரடியாக பலன் பெற்று வருகின்றன. ரயில்வே, சாலை, மின்சாரம், கட்டுமானம், கனரக உற்பத்தி என அது நீள்கிறது.

முந்தைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பொதுத்துறை வங்கிகளுக்கு மோடி அரசு எடுத்த முயற்சிகள் பலன் கொடுத்துள்ளன” என அந்த பதிவில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதே பதிவில் 2013-14 மற்றும் 2022-23 நிதியாண்டுக்கும் இடையே பொதுத்துறை நிறுவனங்கள் பெற்றுள்ள மாற்றங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.