சாதிய கொடூர தாக்குதலுக்கு ஆளான நிலையிலும் ப்ளஸ் டூ தேர்வில் 469 மதிப்பெண் எடுத்து தேர்ச்சிபெற்ற மாணவர் சின்னதுரையை முதல்வர் ஸ்டாலின், இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டையே பதறவைத்த நாங்குநேரி பள்ளி மாணவர்களின் சாதிய கொடூரத் தாக்குதலையும் பட்டியலின மாணவர் சின்னத்துரை, அதை தடுக்க வந்த அவரது தங்கை சந்திராவும் சிந்திய ரத்தத்தையும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கவே முடியாது. எத்தனை இடங்கள் என தெரியாத அளவுக்கு உடம்பு முழுக்க அரிவாளால் வெட்டுபட்ட நிலையில், உயிர்பிழைப்பாரா? என தமிழ்நாடே பதைபதைப்போடு பார்த்துக்கொண்டிருந்த மாணவர் சின்னத்துரை பன்னிரெண்டாம் வகுப்பில் 469 மதிப்பெண் எடுத்ததோடு, தன்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து மேலே வர வேண்டும் என்று அவர் கூறிய கருத்துகள் பலரது இதயத்தை ஈர்த்துள்ளது. மேலும், இயக்குநர் ப.ரஞ்சித்தையும் சந்தித்து வாழ்த்துபெற்றுள்ள நிலையில், மாணவர் சின்னத்துரையிடம் பேசினேன்…
“முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள், ரஞ்சித் அண்ணா எல்லாருமே நேரில் சந்தித்து வாழ்த்தினது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ப்ளஸ் டூவுல 600 க்கு 550 மார்க் எடுப்பேன்னு எதிர்பார்த்தேன். ஆனா, இப்படி நடந்ததால 600 க்கு 469 மார்க்தான் எடுக்க முடிஞ்சது. இவ்ளோ, பாதிப்பிலேயும் நான் படிச்சு மார்க் எடுக்கமுடிஞ்சதுன்னா எல்லாருமே என்னை ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கையூட்டினதுதான் காரணம்.
இப்படியொரு, சம்பவம் எனக்கு நடக்கலைன்னா இன்னும்கூட அதிகமா மார்க் எடுத்திருப்பேன். புன்சிரிப்போடு என்னை அணுகின முதல்வர் அவர்கள் புத்தகம், பேனா கொடுத்து ‘உனக்கு எல்லா உதவியும் செய்யுறேன்’ன்னு நம்பிக்கை கொடுத்தாரு. இயக்குநர் ரஞ்சித் அண்ணனை சந்திச்சப்போ, ‘சென்னைக்கு வந்து படி, எல்லோரும் உனக்கு துணை இருக்காங்க. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளு. ஒரு அண்ணனா செய்யவேண்டியது என்னோட கடமை. அதேமாதிரி, உனக்கும் ஒரு கடமை இருக்கு. நீ படிச்சு முடிச்சு, பெரியாளானதும் இந்த சமூகத்துக்காக கற்பிக்கணும்’னு சொல்லி, 15 புத்தகங்களை கொடுத்து அனுப்பினார்.
’பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை’, ’இந்தியாவில் சாதிகள்’, ’ஜாதியை அழித்தொழிக்கும் வழி’, ’அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு’, ’பாபா சாகேபின் காதல் கடிதம்’, ’முழு விடுதலைக்கான வழி’, ’புத்தரும் அவர் தம்மமும்’ உள்ளிட்ட புத்தகங்களைக் கொடுத்தார். நிச்சயமா நான் நல்லா படிச்சு இந்த சமூகத்துக்கு கற்பிக்கக்கூடிய நபரா மாறுவேன்” என்று நம்பிக்கையுடன் பேசுபவர் ”ஆசிரியர் நடத்தும் பாடங்களை அன்றன்றே வீட்டுக்கு வந்து படித்தால், நல்ல மதிப்பெண் எடுக்கலாம். குறிப்பா, மாணவர்கள் மத்தியில சாதிங்குற எண்ணமே வரமா ஒற்றுமையா இருக்கணும். அது ரொம்ப முக்கியம்” என்கிறார் அழுத்தமாக.