கேரளா மாநிலம், மூணாறு அருகே உள்ள தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்ரல் 29 முதல் மே 2 -ம் தேதி வரை நடைபெற்றது. இரவிக்குளம் பகுதியில் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகம். வரையாடுகளின் பிரசவ காலத்தில் இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காக பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரை சுற்றுலா பயணிகளின் வருகை தடை செய்யப்பட்டு, பூங்கா மூடப்பட்டிருந்தது. மார்ச் மாதம் வரையாடுகளின் பிரசவ காலம் முடிந்ததை தொடர்ந்து கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின.
இந்நிலையில் இரவிகுளம், பாம்பாடும் சோலை தேசிய பூங்காக்கள், சின்னார் வன உயிரின சரணாலயத்தில் வரையாடுகளின் கணக்கெடுப்பு நடந்தது. இதற்காக வனத்துறை, வனக்கல்லூரி, சமூக ஆர்வலர் என தலா ஒருவர் வீதம் 3 பேர் கொண்ட குழுக்கள் 33 பிரிவுகளாக கணக்கெடுப்பு பணியை செய்து முடித்தனர்.
இரவிகுளம் தேசிய பூங்காவில் தமிழகத்தில் உள்ள வால்பாறையை ஒட்டிய பூவாறு, வெம்பன் தண்ணி ஆகிய பகுதிகளில் தமிழக வனத்துறையினருடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழாண்டு கணக்கெடுப்பு பணிகள் முடிந்த நிலையில் 144 குட்டிகள் உள்பட 827 வரையாடுகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
அரியவகை இனமான வரையாடுகளை காண்பதற்காக தமிழகம், கேரளா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கொடைக்கானல், ஊட்டிக்கு அடுத்தப்படியாக அதிக மக்கள் மூணாறுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதற்கிடையே மூணாறு சுற்றுலா துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் 1500 மலர் செடிகளுடன் கூடிய மலர்கண்காட்சியும் நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மூணாறு நோக்கி படையெடுக்கின்றனர். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் இரவிகுளம் தேசிய பூங்காவில் நபர் ஒன்றுக்கு 200 ரூபாய் கட்டணம் செலுத்தி வரையாடுகள் குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருக்கும் அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.