வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில், கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி காலை ஆம்புலன்ஸ் மூலமாகக் கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டார் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. ஸ்ட்ரெச்சரில்தான் சிகிச்சை பிரிவுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது இருந்து துரை தயாநிதிக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த மாதம் 2-ம் தேதி வேலூர் வந்த முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் முதலில் சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று துரை தயாநிதியின் உடல்நிலையை கேட்டறிந்து நலம் விசாரித்தார். அப்போது, தனது அண்ணன் மு.க.அழகிரியுடனும் 20 நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று மாலையும் சி.எம்.சி மருத்துவமனைக்கு திடீரென நேரில் வந்து துரை தயாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்துவிட்டுச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முதலமைச்சருடன் அவரது மருமகன் சபரீசன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரும் வந்திருந்தனர். இன்றோடு சேர்த்து 55 நாள்களாக, சி.எம்.சி மருத்துவமனையில் துரை தயாநிதிக்கான சிகிச்சை தொடர்கிறது.