SRH vs LSG: `இது மேட்ச்சா இல்ல பாலகிருஷ்ணா படமா?' – லக்னோவை இறங்கி அடித்த `கொம்பன்' ஹெட்!

“சமீபத்தில் நாங்கள் இங்கு விளையாடிய போட்டிகள் எல்லாமே ஹை ஸ்கோர் போட்டிகள்தான். அதனால் இப்போட்டியில் நாங்கள் முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை வைக்க விரும்புகிறோம்” எனக் கூறி பேட்டிங்கைத் தேர்வு செய்தார் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். ஹைதராபாத் அணி சார்பாக விஜயகாந்த் வியாஸ்காந்த் என்ற இலங்கை அணியின் லெக் ஸ்பின்னர் களமிறங்கவுள்ளதாக `பர்த்டே பாய்’ கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்தார்.

புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரில் 3 ரன்கள், கம்மின்ஸின் இரண்டாவது ஓவரில் 10 ரன்கள் என நிதானமாக நகர்ந்துகொண்டிருந்த லக்னோவின் முதல் விக்கெட்டை மூன்றாவது ஓவரில் எடுத்தார் புவனேஷ்வர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டி காக் வெளியேறினார். புவனேஷ்வரின் 5வது ஓவரில் ஸ்டாய்னிஸும் சன்வீர் கைகளில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட் விழ, ஹைதராபாத்தின் அட்டகாசமான ஃபீல்டிங் பவுண்டரிகளையும் கட்டுப்படுத்தியது. பவர்ப்ளே முடிவில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது பரிதாபத்திற்குரிய பாப்பம்பட்டி அணி.

SRH vs LSG

அறிமுக வீரர் விஜயகாந்த்தின் சுழலில் 7வது ஓவரில் 3 ரன்களை மட்டுமே தேற்றியது லக்னோ. உனத்கட் வீசிய 8வது ஓவரில் க்ருணால் பாண்டியாவின் சிக்ஸர்கள் ஓரளவிற்கு லக்னோவிற்கு ஆறுதல் தந்தன. 9வது ஓவரையும் தனது சுழலால் கட்டிப்போட்ட விஜயகாந்த், அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கம்மின்ஸின் 10வது ஓவரில் கொஞ்சம் அடித்து ஆட முற்பட்ட கே.எல்.ராகுல், ஃபைன் லெக்கில் நடராஜனிடம் கேட்ச் ஆனார். 33 பந்துகளுக்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

க்ருணால் – பூரண் கூட்டணி ஓரளவிற்கு ஆறுதலைத் தந்துகொண்டிருந்தபோது, நடராஜன் வீசிய 12வது ஓவரில் க்ருணால் பாண்டியாவை தனது துல்லியமான ரன் அவுட்டால் வெளியேற்றினார் பர்த்டே பாய் கம்மின்ஸ். ஒரு கடி ஆறுதல், ஒரு கடி ஆப்பு என ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டிருந்தது லக்னோ. நடராஜனின் 14வது ஓவர் சொதப்ப, 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் குவித்து, தனது முதல் பிக் ஓவரை அடித்தது லக்னோ. 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு, 90 ரன்கள் சேர்த்து மதில் மேல் பூனையாக நின்று கொண்டிருந்தது. விஜயகாந்த்தின் சுழலில் 12 ரன்கள், கம்மின்ஸ் வீசிய 16வது ஓவரில் 10 ரன்கள், நடராஜனின் 17வது ஓவரில் 14 ரன்கள் என எழுந்து உட்கார்ந்தது லக்னோ. 33 பந்துகளில் 50 ரன்களைத் தொட்டது பூரண் – படோனி பார்ட்னர்ஷிப். 19வது ஓவரில் நடராஜனின் எக்ஸ்பன்ஸீவ் பௌலிங் தொடர, அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் லக்னோவிற்குக் கிடைத்தன.

SRH vs LSG

தனது அதிரடியைத் தொடர்ந்து கொண்டிருந்த படோனி, 28 பந்துகளில் அரை சதம் கடந்தார். கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரை பவுண்டரிகளால் குளிப்பாட்டிய லக்னோ அந்த ஓவரில் 19 ரன்களை அள்ளியது. 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் சேர்த்து ஓரளவிற்குச் சண்டை செய்யும் நிலையை எட்டியது லக்னோ. தொடக்கத்தில் லக்னோவின் பேட்டிங் ஆர்டர் சோபிக்கத் தவறினாலும், 52 பந்துகளுக்கு 99 ரன்கள் சேர்த்துத் தந்த பூரண் – படோனியின் பார்டனர்ஷிப் லக்னோவைக் கரைசேர்த்தது.

ஹைதராபாத்திற்குத் தொடக்கம் கொடுத்த ஹெட்டும் அபிஷேக்கும் மூன்று ஓவர்களில் 47 ரன்கள் குவித்தனர். கௌதமின் ஆஃப் ஸ்பின்னையும், யஷின் வேகத்தையும் மென்று தின்று ஏப்பம் விட்டது இக்கூட்டணி. இன்னைக்கு ஒரு பிடி! வெறும் 19 பந்துகளில் 50-ஐ தொட்டது ஹைதராபாத். பிஷ்னோய்யின் 4வது ஓவரிலும் இந்த பிடி தொடர, அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன. ஆஃப் ஸ்பின்னோ லெக் பிரேக்கோ பிடினா பிடிதான்! 16 பந்துகளில் 50 ரன்களைத் தொட்டார் ஹெட். ஹெட் பேட்டைத் தூக்கினாலே பவுண்டரிகளும், சிக்ஸுகளும் பறக்க, கிரிக்கெட் மேட்ச்சா இல்லை பாலகிருஷ்ணா படமா என ஹைதராபாத் ரசிகர்களே குழம்பிப் போனார்கள். நவீனின் 5வது ஓவரில் 4, 4, 6, 4, 4 என மொத்தம் 23 ரன்கள் கொட்டின. ஹெட், அபிஷேக் கூட்டணியோடு, லக்னோவின் சுமாரான ஃபீல்டிங்கும் கைகொடுக்க, 5 ஓவர்களில் 87 ரன்களைச் சேர்த்திருந்தது ஹைதராபாத்.

SRH vs LSG

யஷ் தாக்கூர் வீசிய 6வது ஓவரிலும் அதிரடி தொடர, அந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தன. 34 பந்துகளில் 100 ரன்களைக் குவித்தது ஹைதராபாத். 6 ஓவர்களுக்கு 107 ரன்கள். கடந்த மூன்று போட்டிகளாக மோசமான ஃபார்மைக் கொண்டிருந்த அபிஷேக், 19 பந்துகளில் அரை சதம் கடந்தார். படோனி ஓவரில் 19 ரன்கள், பிஷ்னோய் ஓவரில் 17 ரன்கள், நவீன் ஓவரில் 14 ரன்கள் எனக் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தது ஹைதராபாத். யஷ் தாக்கூரின் 10வது ஓவரில் (9.4) 10 ரன்கள் சேர்த்து, விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது ஹைதராபாத். எக்மோரிலிருந்து செங்கல்பட்டிற்கு டிரெய்னில் போனாலே ஒரு மணிநேரம் ஆகும் என்ற நிலையில், 160+ ரன்களை ஒரு மணிநேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே எட்டியது ஹைதராபாத். “லக்னோ பௌலர்கள் வாங்குன அடிய பார்த்தா ஒரு ஆள் அடிச்ச மாதிரி தெரியல” என ஸ்கோர் கார்ட்டைப் பார்க்கும் நமக்கே சந்தேகம் வருகிறது.

360 டிகிரியைத் தாண்டி, 8 திசையையும் தாண்டி விளாசித் தள்ளிய ஹெட் – அபிஷேக் கூட்டணி, ஹைதராபாத்தின் ரன் ரேட்டை கண்ட மேனிக்கு எகிறச் செய்திருக்கிறது. 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது ஹைதராபாத். மைனஸ் ரன் ரேட்டில் இருந்த ஹைதராபாத், தற்போது +0.41 ரன்ரேட்டுக்கு உயர்ந்துள்ளது.

ப்ளே ஆஃப்பிற்கான நம்பிக்கையோடு களமிறங்கிய லக்னோவிற்கு, படோனி – பூரண் கூட்டணி மட்டுமே ஒரே ஆறுதல் ஆக அமைய, மற்றவை எல்லாம் பாதகமாகவே மாறின. லக்னோ பந்துவீச்சாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த கோர வன்முறைக்கு இனி வரும் போட்டிகளில் அந்த அணி பதிலடி கொடுக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம். பழைய பன்னீர் செல்வமாக மாறியிருக்கும் ஹெட்டைப் பார்த்து மற்ற அணிகள், “கொம்பன் இறங்கிட்டான் மாமா” எனக் கொஞ்சம் ஜர்க் ஆகத் தொடங்கியிருக்கிறார்கள்.

SRH vs LSG

சோகம் என்னவென்றால் இந்த இரண்டு அணிகள் அடித்துக் கொண்டதில் சும்மா ரெஸ்ட்டில் கிடந்த மும்பை இந்தியன்ஸ் அணியை முதல் அணியாகத் தொடரிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள். பல்தான்ஸ் பாவம் பாஸ்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.