கொழும்பு,
இலங்கை சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்த நாட்டின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்தியா, சீனா, ரஷியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என இலங்கை அரசை கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது.
இந்த சூழலில் வெளிநாட்டு நிறுவனத்தால் கையாளப்படும் விசாக்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது அங்கு சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் என்பதை இலங்கை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச விசா சேவையை தொடர அரசு உறுதி பூண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.