சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்துவந்த நிலையில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் கோடை மழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்பி. அணை, திருவண்ணாமலைமாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஆகியஇடங்களில் தலா 9 செமீ மழைபதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 13-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 13, 14-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இன்றும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளையும் கனமழை பெய்யக் கூடும்.
11-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், திண்டுக்கல்,தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில்பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ,வேலூர் மாவட்டம் மேல் ஆலத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தலா 7 செமீ, விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர், கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், சேலம் மாவட்டம் மேட்டூர், விழுப்புரம் மாவட்டம் கெடார், அவலூர்பேட்டை ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவானது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் 12-ம் தேதி வரை 105 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 103 டிகிரி, கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 99 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெயில் இருக்கக் கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.