வாரங்கல்: தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தென்னிந்தியாவில் வசிக்கும் நீங்கள் ஆப்பிரிக்கர்களைப் போன்றவர்கள் என சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தோல் நிறத்தின் அடிப்படையில் நாட்டு மக்களை அவர் அவமதித்துள்ளார். நாட்டு மக்களை அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை சகித்துக் கொள்ள முடியாது.
இதுபோன்ற இனவெறி மனப்பான்மையை ஒருபோதும் ஏற்க முடியாது. பிட்ரோடாவின் இந்த கருத்து பற்றி இளவரசர் (ராகுல் காந்தி) பதில் அளிக்க வேண்டும். பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நாங்கள் அறிவித்தோம். அவருக்கு நல்ல புகழ் இருக்கிறது எனக் கருதியே இந்த முடிவை எடுத்தோம்.
ஆனால், அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் வாக்களித்தனர். இதற்கான காரணத்தை நான் இப்போது தெரிந்து கொண்டேன். அமெரிக்காவிலிருந்து செயல்படும் பிட்ரோடாவின் ஆலோசனைப்படியே திரவுபதி முர்முவை எதிர்த்து வாக்களிக்க இளவரசர் (ராகுல் காந்தி) முடிவு செய்திருப்பார் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.