சிவகாசி: “பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் பேராசை தான். பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது. விதி மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சிவகாசி மேயர் சங்கீதா, ஒன்றிய குழு துணை தலைவர் விவேகன்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதன்பின் அமைச்சர் அளித்த பேட்டி: “தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு இரு நாட்களில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படும். பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் பேராசை தான். பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது. விதி மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
அப்போது அவரிடம் பட்டாசு தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு ஆலை உரிமையாளர் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், இறுதிச் சடங்கிற்கு ரூ.50 ஆயிரம் என பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பட்டாசு தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த தேவா கூறுகையில்: “வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி உரிமையாளர் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடும், இறுதிச் சடங்கு செலவுக்கு ரூ.50 ஆயிரமும் உடனடியாக வழங்கினால் மட்டுமே உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெறுவோம்” என்றார். அவர்களிடம் ஆர்டிஓ விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். உயிரிழந்தவர்களின் உடல்கள் நாளை (மே 10) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.