கொல்கத்தா,
மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை சி.வி.ஆனந்தா போஸ் திட்டவட்டமாக மறுத்து வந்தார். இந்த நிலையில் ராஜ்பவனில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை சுமார் 100 பொதுமக்களிடம் சி.வி.ஆனந்தா போஸ் இன்று காட்டினார்.
இதன்படி கடந்த 2-ந்தேதி மாலை 5.30 மணியளவில் ராஜ்பவனின் பிரதான வடக்கு வாயிலில் உள்ள 2 சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை, இன்று ராஜ்பவனின் தரைத்தளத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து பொதுமக்களுக்கு சி.வி.ஆனந்தா போஸ் திரையிட்டுக் காட்டியுள்ளார்.