புதுடெல்லி: “காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து பாஜக பொய்களை பரப்பி வருகிறது. பிரதமர் மோடி தனது பதவியின் கண்ணியத்தை மறந்து செயல்பட்டு வருகிறார்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தனது சகோதரரும், காங்கிரஸ் வேட்பாளருமான ராகுல் காந்திக்கு ஆதரவாக ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பேசிய பிரியங்கா காந்தி, “தேர்தல் சமயத்தில் தொலைக்காட்சிகளில் மதம் சார்ந்த விவாதங்கள் அதிகம் பேசப்படுகின்றன. ‘என்றாவது ஒரு நாள் காங்கிரஸ் கட்சி உங்கள் எருமையைத் திருடப் போகிறது, காங்கிரஸ் கட்சியினர் உங்கள் வீட்டிற்குள் எக்ஸ்ரே இயந்திரத்துடன் நுழைந்து நகைகளை எடுத்துச் செல்வார்கள்’ எனப் பிரதமர் மோடி கூறி வருகிறார். அவர் எவ்வளவு பெரிய பதவியை வகிக்கிறார்… ஆனால் அந்தப் பதவியின் கண்ணியத்தை அவர் பார்க்கவில்லை.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து பாஜக பொய்களை பரப்பி வருகிறது. மனதில் தோன்றியதையெல்லாம் பேசி உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப பார்க்கிறார். ஆனால் நாட்டில் அடிப்படையாக இருக்கும் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பவில்லை. மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வேலை வழங்கப்படும்.
வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு,ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றார். ஆனால் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. மோடி அரசின் அனைத்து கொள்கைகளும் பெரும் கோடீஸ்வரர்களுக்காக உருவாக்கப்பட்டவை. ஏழைகளின் வாழ்வில் நடக்கும் போராட்டத்தைப் புரிந்து கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கொள்கை கூட இன்று நாட்டில் இல்லை.
காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய நிரந்தர ஆணையம் அமைக்கப்படும். அனைத்து விவசாய பொருட்களும் ஜிஎஸ்டியில் இருந்து விடுவிக்கப்படும். நாடு முழுவதும் இருக்கும் தொழிலாளர்களின் ஊதியம் ரூ.400-க்கு குறையாது, அதற்கான சட்டம் இயற்றப்படும். கோடீஸ்வரர்களுக்காக செயல்படாமல் உங்களுக்காக செயல்படும் அரசாங்கத்தை நாங்கள் கொண்டு வர விரும்புகிறோம்” என்றார் பிரியங்கா காந்தி.