மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர், ரூ.20 ஆயிரம், ரூ.30ஆயிரம், ரூ.6 லட்சம் விரைவாக தரக் கேட்டு கோயில் உண்டியலில் 3 மனு எழுதிப் போட்டுள்ளது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் வியாழக்கிழமை திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் உதவி ஆணையர் நாராயணன், கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி சுமதி சத்தியசீலன் மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதில் ரூ.28 லட்சத்து 78ஆயிரத்து 855 ரொக்கப்பணம், தங்க நகைகள் 117 கிராம், வெள்ளிப்பொருட்கள் 1 கிலோ 342 கிராம் கிடைக்கப்பெற்றன.இதில் பக்தர் ஒருவர் எழுதிய சுவாரசிய மனுக்களும் கிடைத்தன. இதில் முதலாவது மனுவில், ‘ஓம் கந்தா கடம்பா, இன்று எனக்கு ரூ 20 ஆயிரம் வேண்டும் விரைவாக தருக’ ஜி ஜி ரன் என சிவப்பு மையில் எழுதியிருந்தது. 2வது மனுவில், ‘ஓம் முருகா துணை, இன்று எனக்கு ரூ.30 ஆயிரம் வேண்டும், விரைவாக தருக’ ஜிஜி ரன் என எழுதியிருந்தது.
3வது மனுவில், ‘ஓம் சண்முகாவதியே நம, வெற்றி வேலா எனக்கு ரூ.6 லட்சம் விரைவாக வேண்டும். கந்தா கடம்பா கார்த்திகேயா எனது வசம் ரூ 6 லட்சம் வேண்டும். ஏதாவது ஒரு வகையில் தருக தருக’, நன்றி. இப்படிக்கு ஜிஜி ரன் என எழுதியிருந்தது. இதனை உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.