மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ம் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உ.பி.யில் வாராணசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாராணசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
வாராணசியில் நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் மே 14-ல் முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாராணசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.
உ.பி,யின் புனித நகரமான வாராணசியின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வரும் 14-ம் தேதியிலும் அதேபோல் படேல் சிலைக்கு பிரதமர் மாலை அணிவிக்க உள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக மே 13-ல் பிரதமர் மோடி வாராணசி வரவுள்ளார். அதே நாளிலும் அவரது ’ரோடு ஷோ’ வாராணசியில் நடைபெற உள்ளது.
பிரதமர் தனது வேட்புமனுவை வாராணசி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளார். இப்பதவியில் மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் உள்ளார். வாராணசியுடன் சேர்த்து உ.பி.யின் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜுன் 1-ல் நடைபெற உள்ளது. இதன் மூன்றாவது நாளான ஜுன் 4-ல் நாடு முழுவதிலுமான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.