தமிழ்நாட்டில் அரசு நிறுவனமாக இயங்கும் ஆவின் மட்டுமல்லாது இந்தியாவில் இயங்கும் அனைத்து கூட்டுறவு பால் சங்கங்கள் எல்லாம் அமுல் நிறுவனத்தைப் பார்த்துதான் தங்களை வடிவமைத்து கொண்டன. குஜராத்தில் 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்தான் `அமுல்’ என்று அழைக்கப்படுகிறது.
தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள்/ பால் நுகர்வோர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், இணையம் ஆகிய மூன்றடுக்கு முறையைத்தான் அமுல் உருவாக்கியது. இதைப் பின்பற்றித்தான் 1981-ல் ஆவின் செயல்படத் தொடங்கியது. குஜராத்தை மையமாக வைத்துத் தொடங்கிய அமுல், பறந்துவிரிந்து, தனது பொருள்களை உலக நாடுகள் முழுக்க விற்பனை செய்கிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் ஆவின் பலமாக இருந்ததால், அமுலால் இங்கு காலூன்ற முடியாதநிலை இருந்தது.
இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் 10.10 டன் பால்… அதாவது 4.57 சதவிகிதம் பால் தமிழ்நாட்டில் உற்பத்தியாவதே இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால், சமீபகாலமாக ஆவின் செயல்பாடு படுமோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக பலமான பேச்சுகள் அடிபட்ட வண்ணமிருக்கின்றன. இதனால், தமிழ்நாட்டில் அமுல் தனது விற்பனை நிலையங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிலைநிறுத்த தொடங்கியது.
இந்நிலையில், பால் கொள்முதலோடு, விற்பனையும் தொடங்க அமுல் முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி முதல் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
அப்படி ஆவின் நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது என்று விசாரித்தோம்.
இது தொடர்பாக பால் வளத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.
“ஆவினில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளாலும், தொடர் சர்ச்சை நடவடிக்கையாலும், கடந்த ஆண்டு மே மாதம் தனது அமைச்சர் பதவியை இழந்தார் சா.மு.நாசர். அந்த இடத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வந்த பின்னர், விலையேற்றத்தில்தான் குறியாக இருந்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் ஆவினில் 9 முறை விலையேற்றம் நடந்திருக்கிறது. ஆனால், ஆவின் பால் விலைக் குறைப்பால் ஏற்பட்ட நஷ்டக்கணக்கு மீளவே இல்லை.
மறுபக்கம் பால் கொள்முதலும் பாதாளம் நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சராசரியாக 40 லட்சம் லிட்டர், தினமும் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதேபோல பாலின் விற்பனையும் 36 லட்சம் லிட்டர் வரை இருந்தது. மீதமுள்ள பால், நெய், வெண்ணெய், பால் பவுடர், இனிப்பு வகைகளாக மாற்றப்பட்டது. அதன்படி, 300 டன் வரை பால் பவுடர் கையிருப்பு இருந்தது. ஆனால், தற்போது ஆவினில் ஒரு நாளுக்கு பால் கொள்முதல் 29 லட்சம் லிட்டர்தான்.
கடந்த ஆண்டு ஆவினின் பால் கொள்முதல் ஒரு நாளைக்கு 29,53,380 லிட்டர்தான். அதேபோல, பால் பொருள்களின் விற்பனை 2022-ம் ஆண்டுடன் (ஜனவரி முதல் செப்டம்பர் மாதம்) ஒப்பிட்டால் 2023-ம் ஆண்டு 9 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து இருக்கிறது.
2024 ஜனவரியில் 27,12,114 லிட்டராக குறைந்துவிட்டது. மார்ச் மாத கணக்கின்படி, 26,48,795 லிட்டர் என பாதாளத்தில் கிடக்கிறது ஆவின். பால் கொள்முதல் இப்படியென்றால், பால் பொருள்கள் விற்பனை அதைவிட மோசமாக இருக்கிறது. 2023-ல் 58 ஹைடெக் பார்லர்களைத் தொடங்க ஆவின் திட்டமிட்டது. அதில் வெறும் 8 பார்லரைத்தான் பால்வள மாவட்ட அதிகாரிகள் தொடங்கி இருக்கிறார்கள்.
தற்போது ஆவின் நேரடியாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 30.22 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கிறது. இது கொள்முதலைவிட அதிகம். இதுபோக பால் பொருள்களை செய்ய நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் தேவை. இதை சரிகட்டவே வெளிமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் உள்ளிட்டவை மாவட்ட அளவிலேயே கொள்முதல் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 2,906 மெட்ரிக் டன் வெண்ணெய் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது 3,600 மெட்ரிக் டன்னாக அது உயர்ந்துவிட்டது. இதேபோலதான் வெளிமாநிலங்களில் இருந்து பால் பவுடர் கொள்முதலும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இதுபோக, கலப்பட புகார்கள், அளவு குறைவு, பச்சை பால் நிறுத்தம் என ஆவினின் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டது. ஆவினுக்கு அனுப்பும் பாலில் கலப்படம் செய்ததாக, ஆவின் ஊழியர்கள் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் கையும் களவுமாகப் பிடிபட்டனர். ஆனால், அவர்கள்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை.
பால் கொள்முதலை உயர்த்த கடந்த டிசம்பர் மாதம் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.38-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44-லிருந்து ரூ.47 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனாலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் கொள்முதல் உயரவே இல்லை; மாறாக குறைந்து கொண்டே இருக்கிறது.
இப்படி அரசு நிறுவனம் நிர்மூலமாவதினால், தமிழ்நாட்டில் அமுல் கால் பதிக்க விரும்புகிறது. மேலும், தனது ஆசையை நிறைவேற்ற, வியாபார நிலையங்களை திறந்து, அதற்கு அச்சாரமும் போடுகிறது. இதை சரிசெய்யவேண்டிய ஆவின் நிர்வாகம் மொத்தமாக தூங்கிக் கொண்டு இருக்கிறது” என்றனர் வேதனையுடன்.
இறுதியாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் ஆவினுக்குப் போட்டியென்று எந்த நிறுவனமும் இல்லை. ஆனால், அமுல் வருகைக்கு பின்னால் அரசியல் இருப்பதாகவே தெரிகிறது. இருப்பினும் யார் வந்தாலும் ஒன்றும் நடக்காது.
தமிழ்நாடு அரசை பொறுத்தவரை ஆவின் பால் கொள்முதலை உயர்த்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தற்போது வெயில் காலம் என்பதால்தான், பால் கொள்முதல் குறைந்து இருக்கிறது. வெயிலின் தாக்கம் குறைந்த பின்னர் நிச்சயம் பால் கொள்முதல் அதிகமாகும்.” என்றார் சுருக்கமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb