Mumbai Indians: ரோஹித், பும்ரா, சூர்யா போட்ட தனி மீட்டிங்… மும்பை அணியில் என்ன நடக்கிறது?

Mumbai Indians IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில், நடப்பு சீசனில் பல லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயித்த 167 ரன்கள் இலக்கை 9.4 ஓவர்களிலேயே சேஸிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஆட்டமும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் (Sunrisers Hyderabad) மிரட்டலான வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகவே பிளே ஆப் சுற்று ரேஸில் இருந்து வெளியேறியது. மேலும் புள்ளிப்பட்டியலில் கீழே இருக்கும் அணிகளின் வாய்ப்பும் மிகவும் குறைந்துவிட்டது எனலாம். 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு கோப்பையை வென்றிருந்தது. 2021ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் 5வது இடத்தோடு நிறைவு செய்தது. 2022இல் 10வது இடத்தை பிடித்த மும்பை அணி, 2023இல் குவாலிஃபயர் 2 போட்டியில் தோற்று வெளியேறியது. 

சீர்குலைந்ததா மும்பை இந்தியன்ஸ்…?

5 முறை கோப்பை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸியில் (Rohit Sharma Captaincy) கடந்த மூன்று சீசனும் சிறப்பாக விளையாடாததால் அந்த அணியின் நிர்வாகம் குஜராத்திடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்து அவரை இந்த சீசனின் கேப்டனாகவும் நியமித்தது. ரோஹித் சர்மா சட்டென கேப்டன் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். இருப்பினும், ரோஹித் சர்மா ஒரு சீனியர் பேட்டராக அணியில் தொடர்ந்தாலும், கேப்டன்ஸியில் இருந்து அவரை நீக்கியது குறித்து இதுவரை பொதுவெளியில் பேசவில்லை.

ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) கேப்டனாக்கியது அந்த அணியின் டிரெஸ்ஸிங் ரூம் சூழலில் குழப்பத்தை உண்டாக்கியதாக தெரிகிறது. இந்த குழப்பமே மும்பை அணி இந்த சீசனில் அனைத்திலும் வலுவாக இருந்தும் முதல் அணியாக வெளியேற காரணமாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா கேப்டன்ஸியில் செய்த தவறுகளாலும் மும்பை அணி மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டியதாக மூத்த வீரர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

திலக் வர்மா மீதான பாண்டியாவின் சாடல்

அதுமட்டுமின்றி, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு பின் பேசிய ஹர்திக் பாண்டியா திலக் வர்மா (Tilak Varma) மீது குற்றஞ்சாட்டும் வகையில் பேசியிருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதில்,”இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அக்சர் பட்டேலை, ஒரு இடதுகை பேட்டராக திலக் வர்மா அதிரடியாக விளையாடவில்லை. அவரிடம் போதுமான ஆட்ட விழிப்புணர்வு இல்லை” என பேசியிருந்தார். அந்த போட்டியில் திலக் வர்மா 32 பந்துகளில் 63  ரன்களை அடித்திருந்தார். மேலும், நடப்பு சீசனில் மும்பை அணிக்கு அதிக ரன்களை அடித்தவரும் திலக் வர்மாதான். எனவே, இந்த சம்பவத்தினாலும் ஹர்திக் பாண்டியா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.  

சீனியர்கள் தனி மீட்டிங்

மேலும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கியதால் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்ற அணியின் நட்சத்திர வீரர்களுக்குமே அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும தற்போது, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி பாணி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் சீனியர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

நடப்பு ஐபிஎல் சீசனில் அணியின் மன உறுதி சீர்குலைந்திருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது, ரோஹித் ஷர்மா (Rohit Sharma), ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்ற மூத்த வீரர்கள் அணியின் மோசமான செயல்பாடுகளை தொடர்ந்து ஒரு வீரர்கள் மத்தியில் ஒரு கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தோல்விகளுக்கு பின்னிருக்கும் அடிப்படை பிரச்சனை என்ன, அவற்றை தீர்ப்பது எப்படி என்பது குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அடுத்த வருடம் மெகா ஏலம் வர உள்ள சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் பலரும் வெளியேறி ஏலத்திற்கு செல்வார்கள் கூறப்படுகிறது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | Suryakumar yadav : விடைபெறும் சூர்யகுமார்… ஷாக்கில் மும்பை இந்தியன்ஸ்! புதிய அணி இதுதான்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.