கோவை: கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (மே 10) நேரில் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. அணையின் நீர்மட்ட உயரம் 100 அடியாகும். பில்லூர் அணையை மையப்படுத்தி பில்லூர் 1 மற்றும் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், பவானி ஆற்றினை மையப்படுத்தி பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான 10-க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அப்பர் பவானிலியிருந்து அவலாஞ்சி, எமரால்டு, குந்தா அணைகளின் வாயிலாக கெத்தை அணைக்கு தண்ணீர் வந்து, அங்கிருந்து பர்லியாறு நீர்த்தேக்கம் வழியாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து வருகிறது. அது தவிர, கேரளாவிலிருந்து இயற்கையான நீர் வழித்தடங்களின் மூலமும் பில்லூர் அணைக்கு நீர் வரத்து வருகிறது.
பருவ காலத்தில் போதியளவு மழை பெய்யாதது, இயற்கையான வழித்தடங்கள் மூலம் போதியளவுக்கு நீர் வராதது உள்ளிட்ட காரணங்களால் பில்லூர் அணையின் நீர் மட்டம் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிந்து வந்தது. அணையில் 1 முதல் 40 அடி வரை சேறும், சகதியுமாக தான் உள்ளது.
41-வது அடியில் இருந்து தான் அணையில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நீர் வரத்து குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 54 அடிக்கு கீழே சென்றது. தொடர்ந்து, கடந்த வாரம் அப்பர் பவானியிலிருந்து பின்புறம் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, பில்லூர் அணைக்கு நீர் வந்தது. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
இந்நிலையில், பில்லூர் அணையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (மே 10) நேரில் ஆய்வு செய்தார். அவருடன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், குடிநீர் வடிகால் வாரிய உயரதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்தனர். அணையின் தற்போதைய நிலவரம், அணையை மையப்படுத்தியுள்ள குடிநீர் திட்டங்கள், குடிநீர் எடுப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கினர். தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது குறித்தும் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “பில்லூர் அணைப்பகுதியில் நேற்றும், இன்றும் மழை பெய்தது. அவ்வப்போது மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அணையில் 79.4 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அணையில் ஆய்வு செய்த தலைமைச்செயலாளர், தட்டுப்பாடு இல்லாமல் சீரான முறையில் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்” என்றனர்