புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூன் 2-ம்தேதி அவர் திஹார் சிறைக்கு திரும்பவேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 29, 30, மே 3, 7 ஆகிய தேதிகளில் வாதங்கள் நடைபெற்றன.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். மக்களவை தேர்தலையொட்டி அவருக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதுவரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றுஅவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஜூன் 2-ம் தேதி கேஜ்ரிவால், திஹார் சிறைக்கு திரும்ப வேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது: கேஜ்ரிவால் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை. கைதுநடவடிக்கையை எதிர்த்தே மேல்முறையீடு செய்துள்ளார். மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் அலுவலகம் செல்ல தடை: அவர் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, முதல்வர் அலுவலகத்துக்கு செல்ல கூடாது. முதல்வருக்கான பணியில் ஈடுபட கூடாது. எந்த அரசு கோப்பிலும் கையெழுத்திட கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். டெல்லியை விட்டு வெளி மாநிலங்களுக்கு சென்றால் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்க கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. இதை கேஜ்ரிவால் ஏற்றுக்கொண்டுள்ளார். பிரச்சாரத்தில் மட்டும் அவர் ஈடுபடுவார்.
காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்துள்ளார். வழக்கு விசாரணையின்போது இந்த விவகாரத்தை அமலாக்கத் துறை சுட்டிக் காட்டியது. கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று கடும் ஆட்சேபம் தெரிவித்தது. ஆனால், அமலாக்கத் துறையின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. கேஜ்ரிவாலின் ஜாமீன் காலம் முடிந்த பிறகு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘‘டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக கேஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன்அனுப்பப்பட்டது. ஆனால், விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதன் காரணமாகவே கைது செய்யப்பட்டார். மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் கேஜ்ரிவாலுக்கு முக்கியதொடர்பு உள்ளது. இதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். கேஜ்ரிவாலின் ஜாமீன்காலம் முடிந்த பிறகு உச்ச நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதங்களை தெளிவாக எடுத்துரைப்போம்’’ என்று தெரிவித்தன.
தொண்டர்கள் உற்சாக வரவேற்பு: இந்நிலையில், திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று இரவு 7 மணிக்கு வெளியே வந்தார். ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது கேஜ்ரிவால் பேசும்போது, “உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி.சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மே 11 (இன்று) காலை 11 மணிக்கு டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு நடத்துவேன். பிற்பகல் 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன்’’ என்று தெரிவித்தார்.
கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளதை இண்டியா கூட்டணி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெராஉள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.