மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்தவாறே டெல்லி முதல்வர் பொறுப்பை மேற்கொண்டார். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில், நேற்று, அமலாக்க இயக்குனரகம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும் நடவடிக்கையை எதிர்த்து,` `அவருக்கு எந்தவொரு சிறப்பு சலுகை வழங்குவதும் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.
நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்ட மக்கள், சட்டங்களிலிருந்து விலக்கு கோரக்கூடிய அரசியல்வாதிகள் என நாட்டில் இரண்டு வகுப்புகளை உருவாக்கும். மேலும், தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ அல்ல, சட்டப்பூர்வ உரிமையும் இல்லை. இவர் போட்டியிடும் வேட்பாளருமல்ல. எந்த அரசியல் தலைவருக்கும் பிரசாரம் செய்ததற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை. ” என வாதிட்டது.
அமலாக்க இயக்குனரகம் இடைக்கால ஜாமீனை எதிர்த்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திற்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் சட்டக் குழு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இந்த நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணை முடிவில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் அவர் பிரசாரத்தில் ஈடுபடவும் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
“2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. ஒன்றரை ஆண்டுகளாக ஏன் அவரை கைது செய்யவில்லை? தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்த பிறகு கூட கைது செய்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் கைது செய்ததால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? எனவே ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்குகிறோம்” என உச்ச நீதிமன்ற நீதிபதி கண்ணா தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மம்தா பானர்ஜி,“ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்து அவரை வெளியே பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்திருப்பது, தற்போதைய தேர்தல் சூழலில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88