வாஷிங்டன்: நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சிக்கிறது நாசா. இந்த ரயில் பூமியில் நாம் பயன்படுத்தி வரும் ரயிலில் இருந்து சற்று மாறுபடுகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைப்பது தான் நாசாவின் திட்டம். தானியங்கு முறையில் செயல்படும் வகையிலும், சுமைகளைக் கடத்திச் செல்லும் வகையில் இதன் இயக்கம் இருக்க வேண்டும் என நாசா விரும்புகிறது.
உலக நாடுகள் விண்வெளியில தங்களின் ஆதிக்கத்தை செலுத்துகின்ற வகையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் வல்லரசு நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளும் அடங்கும். அண்மைய காலமாக உலக நாடுகளின் ஃபோக்கஸ் நிலவின் மீது அதிகம் விழுந்துள்ளது. இந்த சூழலில் தான் நாசா, ‘லூனார் ரயில்வே’ குறித்து பேசியுள்ளது. நிலவில் நீர் உள்ளதா, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தான் இது கவனத்துக்கு வந்துள்ளது.
லூனார் ரயில்வே: அண்மையில் நாசாவின் என்ஐஏசி (NASA Innovative Tech Concepts) டெக் சார்ந்து ஆறு கான்செப்ட்களை அறிமுகம் செய்தது. அதில் ஒன்றுதான் இந்த லூனார் ரயில்வே. ஃப்ளோட் (Flexible Levitation on a Track) என இந்த திட்டம் சொல்லப்படுகிறது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் மேம்பட்ட போக்குவரத்து அமைப்பை உருவாக்க நாசா முயல்கிறது. நிலவில் ‘மூன் பேஸ்’ கட்டுமானம் மற்றும் அதன் இயக்கம் சார்ந்த பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இது அமையும் என நாசா நம்புகிறது.
இந்த சிஸ்டம் மேக்னட்டிக் லெவிடேஷன் (காந்த ஈர்ப்பு) மூன்று அடுக்கு கொண்ட பிலிம் டிரேக்கை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மேக்னட்டிக் ரோபோக்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த ஃப்ளோட் ரோபோக்களில் சக்கரங்கள், கால்கள் அல்லது தடங்கள் என எதுவும் இருக்காது. மாறாக லெவிடேஷன் முறையில் நகரும். அதாவது மிதந்தபடி செல்லும். இதற்கான டிராக்கை நிலவின் மேற்பரப்பில் நேரடியாக விரிவடைந்திருக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த ஃப்ளோட் ரோபோக்கள் வினாடிக்கு 0.5 மீட்டர் வேகத்தில் பல்வேறு வடிவில் உள்ள சுமைகளை கொண்டு செல்லும் திறன் கொண்டவை. பெரிய அளவிலான ஃப்ளோட் டிசைன் ரோபோக்களின் திறன் அதற்கு ஏற்ப கூடும். தற்போது இந்த திட்டம் 2-ம் நிலையை எட்டி இருப்பதாகவும். இதில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ள உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.