சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 8.94 லட்சம் மாணவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவிகளே முன்னிலை பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை எழுத 9 லட்சத்து 10,148 பள்ளி மாணவர்கள் பதிவு செய்தனர். அதில், 4 லட்சத்து 47,061 மாணவர்கள், 4 லட்சத்து47,203 மாணவிகள் என மொத்தம்8 லட்சத்து 94,264 பேர் மட்டுமேதேர்வில் பங்கேற்றனர். இடைநிற்றல் உள்ளிட்ட காரணங்களால் 15,884 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு முடிந்ததை தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி 88 முகாம்களில் ஏப்ரல் 12-ல் தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது. பிறகு, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிட்டார். தொடர்ந்து, தேர்வுத் துறை இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்த சில நிமிடங்களில் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.
அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு எழுதியதில் 4 லட்சத்து 22,591 மாணவிகள், 3 லட்சத்து 96,152 மாணவர்கள் என மொத்தம் 8 லட்சத்து 18,743 பேர் (91.55%) தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட (91.39%) இது 0.16 சதவீதம் அதிகம். மாணவர்கள் 88.58 சதவீதமும், மாணவிகள் 94.53 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சியில் மாணவர்களைவிட மாணவிகள் 5.95 சதவீதம் அதிகம். 2013-ம் ஆண்டில் இருந்து பொதுத் தேர்வு தேர்ச்சிவிகிதத்தில் மாணவிகளே முன்னிலை வகிக்கின்றனர்.
மாவட்ட அளவிலான தேர்ச்சியில், அரியலூர் முதல் இடத்தில் (97.31%) உள்ளது. சிவகங்கை (97.02%), ராமநாதபுரம் (96.36%) அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன. வேலூர் (82.07%) கடைசி இடத்தில்உள்ளது.
5,134 மேல்நிலைப் பள்ளிகள், 7,491 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 12,625 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 1,364 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 4,105 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. 2023-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 3,718 ஆக இருந்தது.
மாற்றுத் திறன் மாணவர்கள் மொத்தம் 13,510 பேர் தேர்வு எழுதினர். இதில் 12,491 (92.45%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட (89.77%) இது 2.68 சதவீதம் அதிகம்.
260 சிறை கைதிகள் தேர்வு எழுதியதில் 228 பேர் (87.69%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்காலிக மதிப்பெண் பட்டியல்: பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலை தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) மே 13-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே 10-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், 2017 (94.40%), 2018 (94.50%), 2019 (95.17%), 2020 (100%), 2021 (100%), 2022 (90.07%), 2023 (91.39%) என்று அதிகரித்த தேர்ச்சி தற்போது 91.55% ஆக உயர்ந்துள்ளது.
விடைத்தாள் நகல் பெற..: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் பெறவிரும்பும் மாணவர்கள் மே 13-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: முந்தைய காலக்கட்டங்களில்10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் பெறவோ,மறுமதிப்பீடு கோரவோ முடியாது. இதற்கிடையே அரசாணை211-ன்படி அந்த நடைமுறை கடந்த டிசம்பரில் மாற்றப்பட்டது.
இதையடுத்து, நடப்பு ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, விடைத்தாள் நகல் பெற விரும்பினால், பள்ளி மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் மே 13 முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவர்கள் விடைத்தாள் நகல் பெற்றதும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விடைத்தாள் நகல் பெற அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும்.விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வர்கள் தங்கள்விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய இயலும். இதுகுறித்தகூடுதல் விவரங்களை www.dge.tn.nic.in எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.