இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதலே இந்த தேர்தல்: அமித் ஷா பேச்சு

செவெல்லா(தெலங்கானா): இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலே இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் செவெல்லாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “இந்த தேர்தல் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் மட்டுமல்ல; இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதலும்கூட. நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு பக்கம். ராகுல் காந்தி தலைமையில் இண்டியா அணி மற்றொரு பக்கம். நாட்டில் வெப்பம் அதிகமாகிவிட்டால், விடுமுறைக்காக பாங்காக், தாய்லாந்து செல்லக்கூடிய ராகுல் காந்தி ஒரு பக்கம். தீபாவளிக்குக்கூட விடுமுறை எடுத்துக்கொள்ளாமல், அந்த நாளை நமது ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் நரேந்திர மோடி மறுபக்கம்.

வாக்குக்காக சிறுபான்மையினரை தாஜா செய்யும் இண்டியா அணி ஒரு பக்கம். நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள் குறித்து பேசும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மறு பக்கம். 23 ஆண்டு கால நேர்மையான மற்றும் வெளிப்படையான அரசியல் வாழ்க்கையைக் கொண்ட நரேந்திர மோடி ஒரு பக்கம். ஊழலில் வரலாறு படைத்தவர்கள் மறுபக்கம்.

பல தசாப்தங்களாக சட்டப்பிரிவு 370-ஐ அப்படியே வைத்திருந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டுமா? அதை ரத்து செய்து ஜம்மு காஷ்மீருக்கு செழிப்பைக் கொண்டுவரக்கூடியவர் பிரதமராக வேண்டுமா? பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பயப்படும் ஒருவர் பிரதமராக வேண்டுமா அல்லது பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கத் தெரிந்த ஒருவர் பிரதமராக இருக்க வேண்டுமா?

தெலுங்கானாவை காங்கிரஸால் ஒருபோதும் வளர்ச்சி அடைய வைக்க முடியாது. காங்கிரஸும் பாரத் ராஷ்ட்ர சமிதியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். காங்கிரஸ் மற்றும் மஜ்லிஸ் கட்சியை அகற்ற வேண்டுமானால், பாஜக மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தொடக்க காலத்தில் தெலுங்கானா வருவாய் உபரி மாநிலமாக இருந்தது. ஆனால், பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் தெலுங்கானாவின் செல்வத்தை கொள்ளையடித்து, தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்டுள்ளன. அதன் காரணமாகவே, இன்று தெலுங்கானா வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.