கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பித்துக் குளுகுளு ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன. நடப்பு ஆண்டு, நாட்டில் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெயிலின் தாக்கம் காரணமாகக் கோடை வாசஸ்தலங்களை நோக்கிப் படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
கட்டுப்படுத்த முடியாத அளவில் பயணிகளின் வருகை காணப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது இ-பாஸ் முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. கோடை விழாவின் உச்சபட்ச விழாவான உலகப்புகழ் பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி நேற்று துவங்கியது. நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியைத் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா தொடங்கி வைத்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக எளிமையான முறையில் தொடக்கவிழா நடைபெற்றாலும் மலர் அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை மலைக்க வைக்கும் வகையில் செய்யப்பட்டிருந்தன.
சிறப்பம்சங்களாக ஒரு லட்சம் பூக்களைக் கொண்டு 44 அடி அகலம், 35 அடி உயரத்தில் பிரமாண்டமான டிஸ்னி வேர்ல்டு மாதிரி வடிவம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 80 ஆயிரம் கொய் மலர்களைக் கொண்டு 33 அடி நீளம், 25 அடி அகலம், 20 உயரத்தில் நீலகிரி மலை ரயிலின் நீராவி இன்ஜின் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, மலர்களினால் ஆன பிரமிடு, பிரமாண்ட பூங்கொத்து, தேனீ உள்ளிட்ட மாதிரிகளும் காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்னும் கூடுதல் சிறப்பம்சமாக 300க்கும் மேற்பட்ட ரகங்களில் லட்சக்கணக்கான மலர்ச் செடிகள் மலர் மாடங்களை அலங்கரிப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மலர் கண்காட்சியைக் கண்டு ரசிக்கப் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 126-வது மலர் கண்காட்சியைக் கண்டு ரசிக்க அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணமாகப் பெரியவர்களுக்கு 150 ரூபாயும் சிறுவர்களுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
இதேபோல் சிறப்பு வாய்ந்த ரோஜா கண்காட்சியும் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 80 ஆயிரம் ரோஜாக்களைக் கொண்டு யானை, புலி, பாண்டா கரடி, காட்டு மாடு, நீலகிரி வரையாடு போன்ற உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.