சென்னை மற்றும் குஜராத் போட்டிக்குப் பிறகு, பிளேஆஃப்க்கு தகுதி பெற 3 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குஜராத் அணியுடன் தோல்வி அடைந்துள்ளதால் சென்னைக்கு பாதகமும், டெல்லி மற்றும் லக்னோ அணிக்கு நன்மையும் கிடைத்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அகமதாபாத்தில் வென்றதன் மூலம் 10வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆனாலும் இன்னும் பிளே ஆப்பை விட்டு வெளியே போகவில்லை. இப்போது அனைத்து அணிகளும் தலா 2 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் இரண்டு இடங்களை ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா தக்க வைத்து கொள்ள 3வது மற்றும் 4வது இடத்துக்கு சென்னை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் போட்டி போட்டு வருகின்றன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 16 புள்ளிகள்
கொல்கத்தா இன்று மும்பை அணியுடன் விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்கு தகுதி பெரும் முதல் அணியாக இருக்கும். மேலும் ராஜஸ்தான் அணியுடன் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது. ராஜஸ்தான் தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பதால், மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் லீக் போட்டிகளை முடிக்க நினைக்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் – 16 புள்ளிகள்
புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அவர்களின் கடைசி மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் இடத்தைப் தக்கவைத்து கொள்வார்கள். கொல்கத்தா அணியை போலவே முதல் இரண்டு இடங்களில் லீக் போட்டிகளை முடிக்க எண்ணுவார்கள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 14 புள்ளிகள்
லக்னோ அணிக்கு எதிரான மாபெரும் வெற்றியுடன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி பிளேஆஃப் வாய்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. அடுத்து குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு அணிகளுடன் விளையாட உள்ளது. இந்த இரண்டு ஆட்டங்களிலிருந்தும் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற திட்டமிடுவார்கள். இந்த மூலம் பிளேஆஃப் இடத்தைப் பிடிக்க முடியும். இந்த இரண்டில் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் தோல்வியடைந்தால், மற்ற அணிகளின் முடிவிற்காக காத்திருக்க வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் – 12 புள்ளிகள்
குஜராத் அணியுடன் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் பிளேஆஃப் வாய்ப்பு சற்று சறுக்கி உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் சென்னை அணி விளையாட உள்ளது. தற்போது சென்னை அணி NRR காரணமாக 4 வது இடத்தைத் தக்க வைத்து உள்ளது. ஆனால் கடைசி ஆட்டங்களை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணியுடன் விளையாட உள்ளது. இந்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப்க்கு தகுதி பெற முடியும்.
டெல்லி கேபிடல்ஸ் – 12 புள்ளிகள்
டெல்லி அணி இன்னும் இரண்டு ஆட்டங்கள் மட்டுமே விளையாட உள்ளது. ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்று பிளே ஆப் வாய்ப்பை பெற முடியும். டெல்லி அணி அவர்களின் கடைசி மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 12 புள்ளிகள்
ஹைதராபாத் அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு பிறகு லக்னோ தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டெல்லி மற்றும் மும்பை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஒரு தோல்வி அடைந்தாலும் பிளே ஆப் வாய்ப்பை இழக்க நேரிடும்.