சென்னை: கடந்த புதன்கிழமை இந்தியாவில் கூகுள் வாலெட் அறிமுகமானது. இதன் மூலம் பயனர்கள் தங்களது ஐடி கார்டு, சினிமா டிக்கெட், போர்டிங் பாஸ் மற்றும் பல டாக்குமென்ட்களை டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தலாம்.
கூகுள் வாலெட் செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது இந்த செயலில் எந்த வகையிலும் ‘கூகுள் பே’ பயன்பாட்டை பாதிக்காது என அந்நிறுவனம் விளக்கம் கொடுத்தது. கூகுள் வாலெட் அதன் சர்வதேச வெர்ஷனில் இருந்து சற்றே மாறுபட்டு இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த செயலியின் சர்வதேச வெர்ஷனில் ஏடிஎம் கார்டுகளை சேமித்து (Save) வைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் அந்த அம்சம் இல்லை.
இந்த சூழலில் ‘கூகுள் வாலெட் மற்றும் கூகுள் பே’ இடையிலான முக்கிய வேறுபாடு என்ன என்பதை பார்ப்போம்.
கூகுள் வாலெட்: இந்த செயலியின் இந்திய வெர்ஷனை பயனர்கள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். கிஃப்ட் கார்டுகள், ஜிம் மெம்பர்ஷிப், பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் டிக்கெட்டுகள், விமான டிக்கெட்டுகள் போன்றவற்றை டிஜிட்டல் வடிவில் இதில் சேமித்து வைக்கலாம். இதற்காக இண்டிகோ, ஃபிளிப்கார்ட், பைன் லேப்ஸ் உள்ளிட்ட 20 நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது கூகுள். வரும் நாட்களில் மேலும் பல்வேறு பிராண்டுகளுடன் இணைய உள்ளது கூகுள்.
கூகுள் பே: இந்தியாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் யுபிஐ செயலிகளில் ஒன்றாக உள்ளது கூகுள் பே. தினம்தோறும் லட்சக் கணக்கான பரிவர்த்தனைகள் இதன் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் பயனர்கள் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். தங்களது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பை (பேலன்ஸ்) பார்த்துக் கொள்ளவும் முடியும். அதோடு தங்களது செலவினம் குறித்த இன்சைட்ஸை பெறவும் முடியும். இந்தியாவுக்கான பேமெண்ட் செயலியாக ‘கூகுள் பே’ செயலி தொடரும் என அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.