கோவை: கோவையில் 259 பள்ளிகளின் 1,716 வாகனங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இன்று (மே 11) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழக அரசின் சார்பில், பள்ளிகள் தங்களது பள்ளி வாகனங்களில் பின்பற்ற வேண்டிய 20 அம்ச பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிவித்துள்ளது. இவை முறையாக பின்பற்றப்படுகிறதா என ஒவ்வொரு ஆண்டும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினரால் ஆய்வு செய்யப்படும்.
அதன்படி, நடப்புக் கல்வியாண்டு தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில், கோவையில் உள்ள பள்ளி வாகனங்களில் அரசு அறிவித்த வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யும் பணி, காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் இன்று (மே 11) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்று ஆய்வுப் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் ரோகித்நாதன் ராஜகோபால், மாவட்ட கல்வி அலுவலர் புனிதா, வட்டாரப் போக்குவரத்துத் துறையின் கோவை இணை ஆணையர் சிவக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் டி.சிவகுருநாதன், சத்தியகுமார், பாலமுருகன், சத்தியமுருகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் கோவை தெற்கு, கோவை வடக்கு, கோவை மேற்கு, மத்தியம், சூலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 203 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1,323 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் 44 வாகனங்கள் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என அவற்றின் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. கோவையை போல், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில், 56 பள்ளிகளின் 393 வாகனங்கள் இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
முன்னதாக, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆய்வில் குறைபாடு கண்டறியப்பட்டால் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்படும். அந்த வாகனங்களின் குறைபாடுகளை சரி செய்து, பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மீண்டும் வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்றார்.