லண்டன்,
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தனி இடம் உண்டு . இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக அவர் விளையாடி வருகிறார். இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது 700 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளீதரன் (800), வார்னே (708) ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். 2003-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் அறிமுகம் ஆனார் .
ஓய்வு முடிவு தொடர்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் ,
நான் சிறுவயதில் இருந்தே நான் விரும்பிய விளையாட்டை விளையாடி, என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய 20 வருடங்கள் நம்பமுடியாதவை.டேனியலா, லோலா, ரூபி மற்றும் என் பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. மேலும், இதை உலகின் சிறந்த பணியாக மாற்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி.வரவிருக்கும் புதிய சவால்களுக்காக நான் உற்சாகமாக இருக்கிறேன், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என தெரிவித்துள்ளார்.