சிஎஸ்கேவுக்கு லாஸ்ட் சான்ஸ்.‌‌.. இந்த மாற்றத்தை செய்யாவிட்டால் பிளே ஆப் கனவு அம்போ!

Chennai Super Kings IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. லீக் சுற்றில் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் 12 லீக் போட்டிகளை விளையாடிவிட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. 

மறுபுறம் முதலிரண்டு இடங்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏறத்தாழ உறுதிசெய்துவிட்டன. எனவே மூன்றாம், நான்காம் இடங்களுக்குதான் அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இனி அடுத்து வரும் ஒரு போட்டியில் வென்றால் கூட அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். அதுமட்டுமின்றி முதலிரண்டு இடங்களை பிடிக்கவும் போராடும் எனலாம். எனவே, கொல்கத்தா – ராஜஸ்தான் – ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் ரேஸில் முன்னணியில் இருக்கின்றனர். 

தகுதிபெறுமா சிஎஸ்கே?

சென்னை, டெல்லி, லக்னோ, பெங்களூரு, குஜராத் ஆகிய அணிகளும் இன்னும் பிளே ஆப் ரேஸில் நீடிக்கின்றன. இதில் சென்னை, டெல்லி, லக்னோ ஆகிய மூன்று அணிகளும் 12 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளன. குறிப்பாக நெட் ரன்ரேட் அடிப்படையில் சென்னை, டெல்லி, லக்னோ அணிகள் முறையே 4வது, 5வது, 6வது இடத்தில் உள்ளன. பெங்களூரு, குஜராத் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் 7வது, 8வது இடத்தில் உள்ளன. 

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) நேற்று குஜராத் டைட்டன்ஸிடம் படுதோல்வி அடைந்ததால் அவர்களின் பிளே ஆப் வாய்ப்பும் குறைந்துள்ளது எனலாம். எனினும் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலே சிஎஸ்கே அணி பிளே ஆப் சென்றுவிடும் எனலாம். மேலும் தற்போதைய நெட் ரன்ரேட்டை சற்று அதிகப்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. நேற்றைய தோல்வியால் நெட் ரன்ரேட்டிலும் கடுமையான சரிவு ஏற்பட்டது. 

பந்துவீச்சில் இதுதான் பிரச்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிலவும் பிரச்னை இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. சிஎஸ்கேவின் பவர்பிளே பேட்டிங்கும் மோசமாக உள்ளது, பவர்பிளே பந்துவீச்சும் மோசமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே இந்த முறை ஒரு நிலையான காம்பினேஷனை விளையாடாததுதான் முக்கிய காரணம். முஸ்தபிசுர் ரஹ்மான், பதிரானா ஆகியோரின் விலகல் சிஎஸ்கேவை கடுமையாக பாதித்துள்ளது. அதேபோல், கான்வே இல்லாததும் சிஎஸ்கேவுக்கு பின்னடைவாக அமைந்தது. 

இளம் பந்துவீச்சாளர்களான துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜித் சிங் ஆகியோர் சிஎஸ்கேவுக்கு தற்போது பக்கபலமாக இருப்பதால் அவர்களை குறைச்சொல்லி எதுவும் ஆகப்போவதில்லை. இருப்பினும் பந்துவீச்சு திட்டங்களை சரியாக செயல்படுத்தினாலே சிஎஸ்கேவுக்கு பிரச்னை இருக்காது. சிஎஸ்கே அதன் பந்துவீச்சு காம்பினேஷனையும் சரிசெய்ய வேண்டும். பவர்பிளேவில் சரியான காம்பினேஷன் சிக்கிவிட்டால் தொடக்கம் சிறப்பாக அமையும். 

சிஎஸ்கேவின் பெரிய தவறு

அதேபோல்தான் பேட்டிங்கிலும்… மிடில் ஆர்டரில் டேரில் மிட்செல், சிவம் தூபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni) என வலுவான வீரர்கள் இருந்தாலும் ஓப்பனிங்கில்தான் சிஎஸ்கே சொதப்புகிறது. அதுவும் ரஹானேவை ஓப்பனிங்கில் இறக்கி சிஎஸ்கே தவறை செய்கிறது, அதைவிட பெரிய தவறு ருதுராஜ் கெய்க்வாட்டை ஒன் டவுண் வீரராக இறக்குவது. இது பவர்பிளே பேட்டிங்கை பெரிதும் பாதிக்கிறது. 

தோனிக்கு கடைசி மேட்ச்…?

கடந்த போட்டியில் ரச்சின் ரவீந்திராவை கொண்டு வந்தது நல்ல முடிவு என்றாலும் அவருடன் ருதுராஜ் கெய்க்வாட்டைதான் அனுப்பியிருக்க வேண்டும். ரஹானே சிஎஸ்கேவுக்கு ஒன் டவுணில் இறங்கிதான் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளார். எனவே, நீங்கள் ரஹானேவை பிளேயிங் அணியில் எடுத்தால் அவரை ஒன் டவுணிலும் ருதுராஜ் கெய்க்வாட்டை (Ruturaj Gaikwad) ஓப்பனிங்கிலும் களமிறக்க வேண்டும். ராஜஸ்தான் உடனான நாளைய போட்டியில் சிஎஸ்கே இதை செய்யாவிட்டால், தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி அதுவாகவே இருக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.