பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே .கிளப் போட்டிகளில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக பி.எஸ்.ஜி.அணிக்காக விளையாடி வரும் எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல் வெளியானது.இது தொடர்பாக தொடர்ந்து யூகச் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் பி.எஸ்.ஜி.அணிக்காகவே விளையாடி வந்தார்.
இந்த நிலையில் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 சீசனோடு பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேற இருப்பதாக எம்பாப்பே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.இவர் பி.எஸ்.ஜி. அணிக்காக 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்துள்ளார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) விளையாடுவது பி.எஸ்.ஜி. அணிக்காக தனது கடைசி ஆட்டம் என எம்பாப்பே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
பிரான்ஸ் நாட்டில் சிறந்த கிளப் அணியின் வீரராக பல ஆண்டுகள் நான் இருந்தது எனக்கு பெருமை. உலகின் மிகச் சிறந்த கிளப் அணிகளில் ஒன்று பி.எஸ்.ஜி . எனக்கு புதிய சவால் தேவை என கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன்.என தெரிவித்துள்ளார் .
எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.