கொல்கத்தா: பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸை விமர்சித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “அவர் ஏன் இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறித்து விளக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சப்தகிராமில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்ட பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, “கட்டமைக்கப்பட்ட புனைவுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் கூறுகிறார். ஆனால், நான் சொல்கிறேன். ஆளுநர் அவர்களே… உங்களின் கட்டமைக்கப்பட்ட புனைவுக் கதை இனியும் செல்லுபடியாகாது. தன் மீது இப்படியான பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவிக்கப்பட்ட பின்பும் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்.
ஆளுநர் எடிட் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். நான் அந்த முழு வீடியோ காட்சிகளையும் பார்த்தேன். அதில் இருந்தவை அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. எனக்கு வேறு ஒரு வீடியோவும் கிடைத்தது. உங்களின் நடத்தை மிகவும் வெட்கக்கேடானது. ஆனந்த் போஸ் ஆளுநராக இருக்கும் வரைக்கும் இனி நான் ராஜ்பவனுக்கே செல்லப்போவது இல்லை. அவரை நான் வீதிகளில் சந்திக்கவே விரும்புகிறேன்” என்று மம்தா பானர்ஜி பேசினார்.
ஆளுநர் போஸ் மீதான குற்றசாட்டுகள் என்ன? : மே 2-ம் தேதி மேற்கு வங்க ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் ஆளுநர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததார். ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் அவர் இந்தப் புகாரை அளித்தார். இதையடுத்து, அவரை போலீஸார் ஹரே தெரு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் முறைப்படி ஆளுநர் மீது புகார் கொடுத்தார். ஆளுநர் மாளிகையில் நிரந்தர வேலை கொடுப்பதாகக் கூறி, பல சந்தர்ப்பங்களில் தன்னை ஆளுநர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்தப் பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டினை விசாரிக்க கொல்கத்தா போலீஸார் ஒரு குழுவை அமைத்தனர். ஆளுநர் மாளிகையில் இருந்து சிசிடிவி காட்சிகளை பெற முயன்றதாகவும், அங்குள்ள ஊழியர்கள் சிலரிடம் பேச முன்றதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மே 5-ம் தேதி ஆளுநர் போஸ், அரசியல் சாசனப் பிரிவு 361-ஐ சுட்டிக்காட்டி, அதன்படி போலீஸ் விசாரணையை நிராகரிக்கும்படி ஊழியர்களிடம் தெரிவித்திருந்தார். இந்தச் சட்டப்பிரிவு, குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் பதவியில் இருக்கும் வரை அவர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று கூறுகிறது.
இதனிடையே, தன் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், சிசிடிவி காட்சிகளை ஆளுநர் வெளியிட்டிருந்தார். என்றாலும் இந்த முயற்சி ஆளுநர் மீது புதிய குற்றச்சாட்டுக்கு வழிவகுத்தது. ஆளுநர் மீது குற்றச்சாட்டு தெரிவித்திருந்த பெண் தன்னுடைய அடையாளம் வெளிப்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.