ஹைதராபாத்: “இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். 2029 வரை பிரதமர் நரேந்திர மோடிதான் நாட்டை வழிநடுத்துவார்” என்று கேஜ்ரிவாலுக்கு பதிலளிக்கும் வகையில் அமித் ஷா கூறினார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், “இந்த தேர்தலில் ஒருவேளை பாஜக வெற்றி பெற்றால் அமித் ஷாதான் பிரதமராவார்” என கூறி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “நாட்டின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு என அனைத்து திசைகளிலும் வாழும் நாட்டு மக்கள், பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்; மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக வருவார். அதனால்தான் அவர்கள் இந்த வகையான தவறான கருத்தைப் பரப்புகிறார்கள். அவர்கள் கூறுவதுபோல், பாஜகவின் அரசியல் சாசனத்தில் அப்படி எதுவும் இல்லை. 2029 வரை மோடி நாட்டை வழிநடத்துவார். அதோடு, அடுத்து வரக்கூடிய தேர்தல்களையும் மோடி வழிநடத்துவார். இண்டியா கூட்டணிக்கு நல்ல செய்தி எதுவும் இல்லை. இதுபோன்ற பொய்களைப் பரப்பி அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்தது தவறு என்று உச்ச நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இடைக்கால ஜாமீன் ஜூன் 1-ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ஆம் தேதி அரவிந்த் கேஜ்ரிவால், தானாகவே சரணடைந்துவிட வேண்டும். ஜாமின் வழங்கியதை, தான் குற்றமற்றவர் என நீதிமன்றம் கூறிவிட்டது என்பதாக கேஜ்ரிவால் கருதுவாரானால் சட்டத்தைப் பற்றிய அவரது புரிதல் பலவீனமானது என அர்த்தம்.
தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, ST, SC, OBC களுக்கு தீங்கு விளைவிக்கும். எஸ்டி, எஸ்சி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை பறித்துத்தான் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் போகிறார்கள். தெலங்கானாவில் பாஜக எப்போது ஆட்சிக்கு வருகிறதோ அப்போது, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம்.
ஆட்சிக்கு வந்ததும் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று தெலங்கானா தேர்தலின்போது காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. சோனியா காந்தியின் பிறந்த நாளின்போது இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. சோனியா காந்தியின் எந்த பிறந்தநாளின்போது விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பதை அவர்கள் சொல்லவில்லை.
காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவும் பாகிஸ்தானில் அணுகுண்டு உள்ளது என்றும், எனவே இந்தியா அந்நாட்டை மதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். முஸ்லிம்களை தாஜா செய்யும் அரசியலின் உச்சம் இது. அவர்களது அணுகுமுறை கண்டனத்துக்கு உரியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.