பிரதமர் நரேந்திர மோடி, உத்திரபிரதேசம் மாநிலம் வாராணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகள் போட்டியிட இருப்பதாகவும், மே-13 தேதி வாராணாசியில் வேட்பு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் வாராணாசி செல்வதற்காக, திருச்சியில் இருந்து புறப்பட்ட, 111 விவசாயிகளும் செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டனர்.
உறுதி செய்யப்படாத டிக்கெட்டில் இவர்கள் பயணம் மேற்கொண்டதாகவும், சக பயணிகளிடமும் தகராறு செய்தததாகவும், ரயில்வே அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் ரயிலே உயரதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அய்யாக்கண்ணு தலைமையிலான 111 விவசாயிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஜனநாயக படுகொலை எனவும், பிரதமர் மோடியை எதிர்த்து விவசாயிகள் போட்டியிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு, ரயில்வே உயரதிகாரிகள் சூழ்ச்சி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்.
இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “விவசாய விளைபொருள்களுக்கு, எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணம் செய்ய வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட இன்னும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
இக்கோரிக்கைகளை கண்டுகொள்ளாத பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகள், வாராணாசி தொகுதியில் போட்டியிட ஆயத்தமானார்கள். மே 14 தேதி, பிரதமர் மோடி, வாராணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு ஒருநாள் முன்னதாக, 13-ம் தேதி அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகள் வாராணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவெடுத்திருந்தனர். இதற்காக திருச்சியில் இருந்து வாராணாசிக்கு செல்ல, கன்னியாகுமரி- காசி எக்ஸ்பிஸ்ஸில் 111 விவசாயிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஆனால் இவர்களில் 49 நபர்களுக்கு மட்டுமே, படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை உறுதி செய்யப்பட்டது.
மீதி நபர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். இன்று, கன்னியாகுமரி- காசி எக்ஸ்பிஸ்ஸ்ஸில் ஏறிய விவசாயிகளுக்கு இருக்கை கிடைக்கவில்லை. டிக்கெட் உறுதி செய்யப்பட்ட 49 விவசாயிகள் அமர வேண்டிய இருக்கைகளில் வேறு நபர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் அய்யாக்கண்ணு முறையிட்டபோது, 111 பேரும், முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளிலு ஏறிக் கொள்ளுமாறும். ரயில் தஞ்சாவூர் சென்றதும், உங்களுக்காக ஒரு தனிப்பெட்டி இணைத்து தருகிறோம் என தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அந்த ரயில் தஞ்சாவூர் வந்தடைந்த பெட்டி எதுவும் கூடுதலாக இணைக்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள், ரயிலே துறையை கண்டித்து, முழக்கமிட்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். விவசாயிகளைச் சமாதானம் செய்யும் நோக்கில், விழுப்புரம் வரை பொறுத்திருங்கள்… அங்கு சென்றதும், கூடுதலாக ஒரு பெட்டி உங்களுக்காக இணைக்கப்படும் என ரயில்வே உயரதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். ஆனால், இந்த ரயில் விழுப்புரம் சென்ற பிறகும் பெட்டி இணைக்கப்ப்படவில்லை. ரயில், செங்கல்பட்டு சென்ற நிலையில், 111 விவசாயிகள் மீதும் ரயில்வே அதிகாரிகள் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி, காவல்துறையினரிடம் புகார் அளித்து கைது செய்ய வைத்துள்ளனர். பிரதமர் மோடியை எதிர்த்து விவசாயிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற நோக்கத்தின் காரணமாகவே, ரயில்வே துறை சூழ்ச்சி செய்துள்ளது. 49 விவசாயிகளுக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டிருந்தும் கூட, அவர்களுக்கு இருக்கை வழங்கப்படவில்லை.
விவசாயிகளின் பயணத்தை தடுப்பதற்காகவே, கன்னியாகுமரியில் இருந்து அந்த ரயில் கிளம்பும் போது. ஏற்கனவே அதில் இணைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டி கழற்றப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு, அதற்கான வசதிகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால் விவசாயிகள் விஷயத்திலும் தேர்தல் கமிஷன் நடுநிலையோடு நடந்துகொள்ளவில்லை. இதை, உச்சநீதி மன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக்கூடாது. மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்து கொடுக்கும் பொறுப்பும் கடமையும் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது’’என தெரிவித்தார்.