2024 இறுதிக்குள் மூன்று பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை இலங்கைக்கு கொண்டுவர முடியும் – முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் நிதியமைச்சு வழங்கியுள்ள ஒரு பில்லியன் டொலர்கள் என்ற முதலீட்டு இலக்கை மூன்று மடங்குகளாக அதிகரித்து சுமார் 03 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவர முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நாட்டின் முதலீட்டுச் சூழல் தற்போது 200% மேம்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலீடுகள் நாட்டிற்குள் வருவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் எதிர்காலம் பற்றிய உறுதிப்பாடு ஆகியவை இருக்க வேண்டும் எனவும், தற்போது இந்நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவுவதை நாட்டிற்கு வரும் முதலீடுகள் உறுதிப்படுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,

முதலீடுகள் நாட்டிற்குள் வருவதற்கு, அரசியல் ஸ்திரத்தன்மை, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்த உறுதிப்பாடு இருக்க வேண்டும். அதற்கிணங்க, இந்நாட்டிற்கு முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. நாட்டில் முதலீட்டுச் சூழல் மேம்பட்டுள்ளது. 02 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையில் இருந்து, 200 சதவீதம் மாறியுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வரவில்லை. ஆனால் தற்போது முதலீட்டாளர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள் என்பதை புள்ளி விபரங்களுடன் என்னால் முன்வைக்க முடியும். மேலும் நிதியமைச்சினால் வழங்கப்பட்ட இலக்குகளை தாண்டிச் செல்ல முடிந்துள்ளது. இவை அனைத்தும் ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் முன்னெடுத்த வேலைத் திட்டங்களினால் இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மட்டும் நிதி அமைச்சின் இலக்கை நிறைவு செய்வது தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள், நிதியமைச்சு எமக்கு வழங்கிய இலக்கை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதாவது இந்த வருடத்தில் 03 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றேன்.

2023ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட முதலீட்டு திட்டங்கள் இந்த வருடத்திலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்த முதலீடுகள் இந்த ஆண்டில் சேர்க்கப்படவில்லை. மேலும், இந்த ஆண்டு முதலீட்டு சபை பிரதிநிதிகளை நியமித்து வெளிநாடுகளில் முதலீடுகளை ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள இலங்கை வர்த்தகர்களை உள்ளடக்கிய Global Forum ஊடாக முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின் மூலம் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெற்றிகரமான முடிவுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

இதற்கு மேலதிகமாக, திருகோணமலை, மாங்குளம், பரந்தன், காங்கேசந்துறை பிரதேசங்களை அண்மித்த கைத்தொழில் பேட்டைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் முதற்கட்டமாக காங்கேசந்துறையில் உள்ள தனியார் கைத்தொழில் பேட்டையில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கனடா வாழ் இலங்கையர்களை உள்ளடக்கிய பலம்வாய்ந்த குழு ஒன்று இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது. 500 மில்லியன் டொலர் முதலீட்டில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக, சூரிய, காற்றாலை வலுசக்தி, பசுமை ஹைட்ரஜன் ஆகிய துறைகள் நாட்டின் முக்கிய முதலீடுகளாக மாறும். இந்த நாட்டின் கடன் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, இந்தியாவுடன் இணைந்து இந்த அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.

பல அரசியல்வாதிகள் கூறும் வகையில் நாம் தொடர்ந்தும் பயணிக்க வேண்டியது இந்தப் பாதையில் என்றால், இந்தப் பாதையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கி இருந்தால், அந்தப் பாதையில் செல்ல வேறு எவர் வேண்டும்? அவருடனேயே தொடர்ந்தும் இந்தப் பாதையில் செல்லலாம் என்றே நாம் கூறுகிறோம் ” என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.