CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே… சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு…?

CSK vs RR Match Preview: 17ஆவது ஐபிஎல் தொடரின் லீக் (IPL 2024) சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஒவ்வொரு லீக் போட்டியின் வெற்றியும் தோல்வியும் பல அணிகளின் பிளே ஆப் வாய்ப்புகளை தீர்மானிக்கும் எனலாம். இன்று நடக்கும் லீக் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தொடரில் இருந்து வெளியேறி 9வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இருப்பினும் இந்த போட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது. 

தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் 4ஆம் இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2ஆம் இடத்தில் வலுவாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (CSK vs RR) சந்திக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (Rajasthan Royals) இந்த போட்டியை வென்றால் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். மேலும், இன்றைய போட்டியில் கொல்கத்தாவும், நாளை போட்டியில் ராஜஸ்தான் அணியும் தோல்வியடையும்பட்சத்தில் முதலிரண்டு இடங்களுக்கான போட்டியும் அதிகமாகும். 

நாளை முக்கிய போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற நாளைய போட்டியை கண்டிப்பாக வென்றாக வேண்டும். அப்படி நாளைய போட்டியில் தோல்வியடைந்தால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில்தான் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியும். எனவே நாளைய போட்டியிலும், மே. 18ஆம் தேதி நடைபெறும் ஆர்சிபி போட்டியிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றாக வேண்டும். 

அந்த வகையில், நாளை போட்டியும் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த போட்டியிலும் டாஸ் முக்கியத்துவம் பெறுகிறது. ராஜஸ்தான் அணி தனது முதல் 9 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் கடைசி இரண்டு போட்டிகளில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளிடம் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே – ஆர்ஆர் நேருக்கு நேர்

இரண்டு தோல்விகளுடன் ராஜஸ்தான் சென்னைக்கு வந்தாலும், கடந்தாண்டு சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை ராஜஸ்தான் அசத்தலாக வீழ்த்தியதை யாராலும் மறக்கவே முடியாது. இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் (CSK vs RR Head To Head) மோதியுள்ளது. அதில் 15 போட்டிகளில் சென்னை அணியும், 14 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும் வென்றுள்ளது. 

இரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளை வென்றுள்ளது. 2021ஆம் ஆண்டு ஏப். 19ஆம் தேதி நடந்த போட்டியில்தான் கடைசியாக சென்னை அணி ராஜஸ்தான் வீழ்த்தியது. அதன்பின் நான்கு போட்டிகளையும் ராஜஸ்தானே வென்றிருக்கிறது. சேப்பாக்கத்தில் இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளது. அதில் 6 முறை சிஎஸ்கேவும், 2 முறை ராஜஸ்தானும் வென்றுள்ளது. 

ஆடுகளம் எப்படி?

சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தை (CSK vs RR Pitch Report) எடுத்துக்கொண்டால் சுழலுக்கு சாதகமாக இருக்கும் எனலாம். நாளையும் ஆடுகளம் அப்படி இருக்கும்பட்சத்தில் இரு அணிகளும் அதனை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள விரும்பும். சிஎஸ்கே அணியில் ஜடேஜா, சான்ட்னர், மொயின் அலி ஆகியோர் இருக்கும்பட்சத்தில் ராஜஸ்தான் அணியில் அஸ்வின், சஹால் ஆகியோர் உள்ளனர். அவர்கள் சர்ஃப்ரைஸாக கேசவ் மகாராஜை கூட இறக்கலாம். இந்த ஆடுகளம் சந்தீப் சர்மா போன்ற பந்துவீச்சாளர்களுக்கும் அதிகம் கைக்கொடுக்கும் என்பதால் ராஜஸ்தானுக்கு கூடுதல் சாதகம் எனலாம். சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சு படை அனுபவமின்மையால் தவிக்கிறது. 

அஸ்வினின் தனி வியூகம்…

இதில் அஸ்வினுக்கு (Ravichandran Ashwin) சேப்பாக்கம் ஆடுகளத்தின் அத்தனையும் அத்துப்படி என்பதால் அவர் வைத்திருக்கும் சர்ஃப்ரைஸ் வியூகத்தை தகர்ப்பதும் சிஎஸ்கேவுக்கு முக்கிய பணியாகும். குறிப்பாக, சேப்பாக்கத்தில் கடந்தாண்டு போட்டியில் அஸ்வின் 4 ஓவர்களை வீசி 25 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார், மேலும் 22 பந்துகளில் 30 ரன்களையும் அவர் அடித்திருந்தார். அவர்தான் அந்த போட்டியில் ஆட்ட நாயகனாகவும் தேர்வானார். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். இருப்பினும், இந்தாண்டு சேப்பாக்கத்தில் முதல்முறையாக மாலை போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.