PSG அணியிலிருந்து விலக இருப்பதாக கிலியான் எம்பாப்பே அறிவித்திருக்கிறார்.
25 வயதான பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்வே PSG (பாரிஸ் செயிண்ட் – ஜெர்மைன்) அணிக்காக விளையாடி வருகிறார். PSG அணிக்காக இதுவரை 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்கள் அடித்திருக்கிறார். 2022 கால்பந்து உலகக் கோப்பையில் அர்ஜெண்டினாவிற்கு எதிராக அபாரமாக விளையாடி 3 கோல்களைப் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 சீசனோடு PSG அணியிலிருந்து வெளியேற இருப்பதாக எம்பாப்பே அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த எம்பாப்பே, “நேரம் வரும்போது உங்களுடன் பேசுவேன் என்று சொன்னேன். இப்போது பேச வேண்டிய நேரம் வந்துள்ளது. PSG அணிக்காக இந்த சீசனுடன் எனது பயணத்தை முடித்துக் கொள்ள போகிறேன் என்பதை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். இந்த அணியுடனான எனது ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை. இதனால் பிஎஸ்ஜி அணியுடனான எனது பயணம் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும். ஞாயிற்றுக்கிழமை பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் எனது கடைசி ஆட்டத்தை விளையாடுவேன்.
ஒரு அணியுடன் நீண்டகாலமாக இருந்துவிட்டு வெளியேறுவது கடினம் என்று எனக்குத் தெரியும். ஆனால் தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு ஒரு புதிய சவால் தேவை என்று நினைக்கிறேன்.
இது வாழ்நாள் முழுவதும் என் நினைவில் வைத்திருக்கும் ஒரு கிளப். எனக்கு இங்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. நான் இனி இந்த அணியில் ஒரு வீரராக இருக்க மாட்டேன். ஆனால் தொடர்ந்து ஒவ்வொரு ஆட்டத்தையும் பார்த்து ரசிக்கும் ரசிகராக இருப்பேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
PSG அணியில் இருந்து விலகும் எம்பாப்பே பிரபல கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட்டில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.