புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் 10 உத்தரவாதங்களை இன்று வெளியிட்டு உள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், இந்த உத்தரவாதங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன என நான் உறுதிப்படுத்துவேன் என்றும் கூறினார்.
அதில், நாட்டில் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும். அனைத்து ஏழைகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், நல்ல மற்றும் சிறந்த இலவச கல்வியை வழங்குவோம் உள்ளிட்ட உத்தரவாதங்களை அவர் வழங்கினார்.
அப்போது அவரிடம், இந்த உத்தரவாதங்களை அறிவிக்கும் முன் இந்தியா கூட்டணி கட்சிகளிடம் பேசி விட்டீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளிக்கும்போது, அதற்கெல்லாம் நேரமில்லை என கூறியதுடன், கூட்டணி கட்சிகளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டார்.
எனினும், இந்தியா கூட்டணியில் உள்ள யாரும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை திறப்பதற்கான தன்னுடைய வாக்குறுதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என நம்பிக்கையும் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி பதவிக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, இல்லை. அதில் நான் இல்லை என்று கூறினார். தொடர்ந்து அவர், எதிர்க்கட்சிகள் அதிகாரத்திற்கு வந்து விட்டால், ஆம் ஆத்மியின் உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும் என நான் உறுதி செய்வேன்.
மோடியின் உத்தரவாதங்களா அல்லது கெஜ்ரிவாலின் உத்தரவாதங்களா என மக்களே விருப்பப்பட்டு, முடிவு செய்ய வேண்டும். இதற்கு முன் நடந்த தேர்தல்களில் நாங்கள் அறிவித்த அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம். அடுத்த ஆண்டு மோடி ஓய்வு பெற்று விடுவார்.
அதன்பின் அவருடைய உத்தரவாதங்களை யார் நிறைவேற்றுவார்கள்? என்பதில் தெளிவில்லை. ஆனால், நான் இருக்கிறேன். அதனால், கெஜ்ரிவாலின் உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும் என நான் உறுதி செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.