குஜராத் மாநிலம், சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தவர், நிலேஷ் கும்பானி. இவரது வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்து போட்டவர்கள் கடைசி நேரத்தில் `அக்கையெழுத்தை நாங்கள் போடவில்லை’ என்று கூறியதால், கடந்த மாதம் 21-ம் தேதி நிலேஷ் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு பதில் மாற்று வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தவரது வேட்பு மனுவிலும் கையெழுத்து குளறுபடி இருந்தது. எனவே அவரது வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தவிர பகுஜன் சமாஜ் உட்பட சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுகொண்டனர். இதனால் பா.ஜ.க வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சம்பவத்திற்கு பிறகு திடீரென நிலேஷ் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவர் பா.ஜ.க-விடம் பணம் வாங்கிவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. வேட்பு மனுவில் நிலேஷ் நெருங்கிய உறவினர்கள்தான் கையெழுத்திட்டு இருந்தனர்.
எனவே அவர்கள் கையெழுத்து போட்டதை மறுக்கவேண்டிய அவசியமும் இல்லை. அதோடு பா.ஜ.க நிலேஷ் வேட்பு மனுவில் இருக்கும் கையெழுத்து குறித்து சந்தேகம் எழுப்பியதிலும் சந்தேகம் எழுந்தது. அனைத்துமே திட்டமிட்டு நடந்ததாக தெரிந்தது.
கடந்த 20 நாள்களாக தலைமறைவாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ், திடீரென நேற்று வெளிப்பட்டார். அவர் அளித்த பேட்டியில், ”கடந்த சில நாள்களாக மாநில காங்கிரஸ் தலைவர் சக்தி சிங் மற்றும் ராஜ்கோட் காங்கிரஸ் வேட்பாளர் பரேஷ் ஆகியோருக்கு மதிப்பளித்து அமைதியாக இருந்தேன். காங்கிரஸ் தலைவர்கள்தான் எனக்கு துரோகம் செய்தனர். 2017 சட்டமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் என்னை வேட்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டனர். எனவே முதலில் தவறு செய்தது காங்கிரஸ் கட்சிதான்.
நான் முதலில் தவறு செய்யவில்லை. காங்கிரஸ்தான் எனக்கு துரோகம் செய்துவிட்டது. வேலையும் செய்யாமல், அடுத்தவர்களையும் வேலை செய்ய விடாத 5 பேர்தான் சூரத்தில் கட்சியை நடத்துகின்றனர்” என்றார். `2017-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட கடைசி நேரத்தில் வாய்ப்பு கொடுக்காததால், அதற்கு இப்போது பழிவாங்கினீர்களா?’ என்று கேட்டதற்கு, நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb