புதுடெல்லி: “கோடீஸ்வரர்களிடமிருந்து டெம்போக்களில் பெற்ற பணத்தை சிலர் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், சமத்துவத்தை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சி நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்” என்று ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியைச் சாடியுள்ளார்.
அம்பானி, அதானியிடமிருந்து காங்கிரஸ் கட்சி டெம்போவில் பணம் பெற்றது என்ற மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறாக பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த பத்து ஆண்டுகளாக டெம்போவில் கோடீஸ்வரர்களிடம் இருந்து பெற்ற பணத்தினை அவர்கள் (பாஜக) எண்ணிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள்ஒவ்வொரு பிரிவினருக்கும் சமத்துவத்தை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் நாட்டை எக்ஸ்- ரே செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் விளப்பரம் ஒன்றையும் அவர் பகிரிந்துள்ளார்.
அம்பானி மற்றும் அதானி குறித்த மோடியின் பேச்சு குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், “அதானியும், அம்பானியும் காங்கிரஸுக்கு டெம்போவில் பணம் அனுப்பினார்களா என்பதை அறிய சிபிஐ அல்லது அமலாக்கத் துறையை சோதனை நடத்துங்கள்” என்று தெரிவித்திருந்தனர்.
சமூக – பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பிரதமர் தனது பார்வையை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியிருந்தது. அனைத்து சாதியினரும் தங்களின் சமூக – பொருளாதார நிலையினை அறிந்து கொள்வதற்காக நாடு தழுவிய அளவில் சமூக – பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
முன்னதாக தெலங்கானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “பல ஆண்டுகளாக காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) 5 தொழிலதிபர்களைப் பற்றி பேசினார். பின்னர் அம்பானி, அதானி பற்றி மட்டும் அவர் பேசத் தொடங்கினார். இப்போது அவர்கள் பற்றியும் பேசாமல் திடீர் மவுனம் காத்து வருகிறார்.
நான் காங்கிரஸ் இளவரசரிடம் (ராகுல் காந்தி) ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அம்பானி, அதானியிடமிருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள்? நடைபெறும் தேர்தலுக்காக அவர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி எவ்வளவு நிதி பெற்றது? எத்தனை வாகனங்களில் பணத்தைப் பெற்றது? ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நான் உணர்கிறேன். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தேசத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.