MS Dhoni First Match In Chepauk Stadium: “என் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தான் இருக்கும்” என 2021ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற பின் நடந்த ஒரு விழாவில் மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni) கூறியிருப்பார். அதன்பின் அவரது தலைமையில் சிஎஸ்கே மற்றொரு கோப்பையையும் 2023ஆம் ஆண்டு சீசனில் வென்றுவிட்டது. தற்போது 2024ஆம் ஆண்டு சீசனில் அவர் கேப்டன் பதவியில் இல்லாவிட்டாலும், 42 வயதில் ஒரு இளம் விக்கெட் கீப்பராக செயலாற்றி வருகிறார்.
மேலே சொன்னதுபோல் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கத்தில்தான் (Chennai Chepauk Stadium) இருக்கும் என்றால் தோனிக்கு இன்றைய ராஜஸ்தானுக்கு (CSK vs RR) எதிரான போட்டி என்பது கடைசி போட்டியாக கூட அமைய வாய்ப்பிருக்கிறது. காரணம், இன்றைய போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்துவிட்டால் பிளே ஆப் வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும். மேலும் இதுதான் சிஎஸ்கேவின் கடைசி ஹோம் லீக் மேட்ச் ஆகும். குவாலிஃபயர் 2, இறுதிப்போட்டி ஆகியவை சென்னை சேப்பாக்கத்தில்தான் நடைபெறுகிறது என்றாலும் சிஎஸ்கே பிளே ஆப் செல்லாவிட்டால் இன்றைய போட்டிதான் கடைசி.
காத்திருக்கிறதா சர்ப்ரைஸ்…?
எனவே, சிஎஸ்கே இன்று வெற்றி பெற தவறும்பட்சத்தில் தோனி தனது ஓய்வை (Dhoni Retirement) இன்றே அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக தோனி அனைத்தையும் சர்ப்ரைஸாக செய்யக்கூடியவர் என்பதால் ஓய்வு அறிவிப்பும் கூட சர்ப்ரைஸாக வரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2019 உலகக் கோப்பைக்கு முன் தோனி இந்தியாவில் கடைசியாக விளையாடிய போட்டி என்றால் அது அவரின் சொந்த ஊரான ராஞ்சியில்தான். அந்த போட்டிக்கு அவர் உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.
‘இது கடைசி போட்டி இல்லை…’
எனவே, தோனி எப்படி தனது ஓய்வை அறிவிக்க உள்ளார் என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் வருத்தத்துடன் இருக்கின்றனர். குறிப்பாக, இது தோனியின் கடைசி போட்டியில்லை என்றும் சிஎஸ்கே இறுதிப்போட்டி வரை விளையாடி 6வது முறையாக கோப்பையை வெல்லும் என்றும் பல ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அந்த 6வது கோப்பையுடன்தான் தோனி விடைபெற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
வயது முதிர்ந்த போதிலும்..
வலிகள் மிகுந்த போதிலும்..
வலிமை குறைந்த போதிலும்..
வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!#ThalaForever @msdhoni pic.twitter.com/382Fge1FLK
— Chennai Super Kings (@ChennaiIPL) May 11, 2024
தோனியின் முதல் டெஸ்ட் போட்டி…
அந்த வகையில், அனைவரும் சேப்பாக்கத்தில் தோனியின் கடைசி போட்டியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சேப்பாக்கத்தில் தோனி விளையாடிய முதல் சர்வதேச போட்டியை இங்கு நினைவுக்கூர்வது சிறப்பாக இருக்கும். ஏனென்றால், சர்வதேச டெஸ்ட் அரங்கில் தோனி அறிமுகமானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான்…
பெருமழைக் காலத்தில் டெஸ்ட் அறிமுகம்…
2005ஆம் ஆண்டு டிசம்பர் ஒரு பெருமழைக் காலத்தில் இலங்கைக்கு எதிரான அந்த முதல் டெஸ்ட் போட்டியில் மகேந்திர சிங் தோனி (MS Dhoni Test Debut) இந்திய அணியில் விளையாடினார். இருப்பினும் முதல் மூன்றரை நாள் மழையால் பாதிக்கப்பட்டு ஒரு பந்துகூட வீசப்படவில்லை. நான்காவது நாளின் பிற்பகுதியில்தான் அந்த போட்டி தொடங்கியது. இரண்டு அணிகளும் தலா ஒரு இன்னிங்ஸை மட்டுமே விளையாடின. மொத்தமே 116.2 ஓவர்கள்தான் வீசப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 167 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நிலையில், ஐந்தாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது.
அந்த போட்டியில் இலங்கை வீரர் சமிந்தா வாஸ் இந்திய அணி வீரர்களை கலங்கடித்தார். கம்பீர், சேவாக் என ஓப்பனர்களை தூக்கிய வாஸ் நீண்ட நேரம் போராடிய ராகுல் டிராவிட்டின் விக்கெட்டையும் கைப்பற்றினார். அந்த போட்டியில் வாஸ் 21 ஓவர்களில் 14 ஓவர்களை மெய்டனாக வீசினார். அவர் ஓவர்களில் 20 ரன்களே எடுக்கப்பட்டது. அவர் மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.
சென்னையின் செல்லப்பிள்ளை
என்னதான் அன்று ஆட்ட நாயகன் சமிந்தா வாஸ் என்றாலும் இந்திய அணிக்கு அன்று தோனிதான் நாயகனாக திகழ்ந்தார். சேவாக் ஆரம்பத்தில் அவரது பாணியில் அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்துச் சென்றாலும் ராகுல் டிராவிட் – சச்சின் ஜோடிதான் நீண்ட நேரம் நின்று இலங்கையின் பொறுமையை சோதித்தது. ராகுல் டிராவிட் 105 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 36 ரன்களையும், சச்சின் டெண்டுல்கர் 126 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்களையும் சேர்த்தார். விவிஎஸ் லஷ்மண், கங்குலி ஆகியோரும் அந்த போட்டியில் சோபிக்கவில்லை.
அன்றைய ஆடுகளத்தில் சீனியர் வீரர்களே திணறிக்கொண்டிருந்தபோது அறிமுக வீரரான தோனி அதுவும் சிவப்பு பந்தில் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 30 ரன்களை குவித்தார். அவர் மொத்தம் 6 பவுண்டரிகளை விளாசியிருந்தார். அதாவது, சச்சின், ராகுல் டிராவிட் ஆகியோர் 213 பந்துகள் நின்றே வெறும் 5 பவுண்டரிகளைதான் அடித்திருந்தனர். அன்றைய தினமே சென்னையின் செல்லப்பிள்ளையாகிவிட்டார் தோனி.
மறக்குமா நெஞ்சம்…
சென்னையும், தமிழ்நாடும் தனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்திருப்பதாகவும், தன் வாழ்வில் தமிழ்நாட்டையே மறக்கவே மாட்டேன் என்றும் தோனி பலமுறை கூறியிருக்கிறார். அதேபோல்தான், தோனியையும் தமிழ்நாடு மறக்கவே மறக்காது. இன்றைய போட்டி தோனியின் கடைசி போட்டியாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால், தோனி மீதான இந்த பாசமும் நேசமும் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கப்போவதில்லை.