“தேவைப்பட்டால் அணுகுண்டுகளை தயாரிப்போம்” – இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உதவியாளர் கமால் கராசி ‘தேவைப்பட்டால் அணுகுண்டு தயாரிப்போம்’ என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “அணுகுண்டை உருவாக்கும் முடிவு இதுவரை எங்களிடம் இல்லை. ஆனால் ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் ராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை இஸ்ரேல் எங்களது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், எங்கள் ராணுவ நிலைப்பாட்டை மாற்றி அணுகுண்டுகள் தயாரிப்போம்” என்று கூறியுள்ளார். ஏற்கெனவே இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் புகைந்துவரும் நிலையில் ஈரான் தலைவரின் ஆலோசகரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக ஈரானின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரபேல் கிராஸி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தற்போதைய நிலவரம் திருப்தியளிப்பதாக இல்லை. நாம் கிட்டத்தட்ட ஒரு பதற்றமான சூழலில் நிற்கிறோம். இது உடனடியாக மாற்றப்பட வேண்டும்” என்றார்.

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஏப்ரல் மாதம் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்தது. ஆனால் சர்வதேச சமூகங்களில் அழுத்தத்தால் பதற்றம் சற்றே தணிந்தது. இந்நிலையில் ஈரான் தலைவரின் ஆலோசகரின் ‘அணுகுண்டு தயாரிப்போம்’ என்ற எச்சரிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் மோதல் பின்னணி என்ன? – இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி தீவிரவாதிகள் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் ராணுவம் ஆதரவு அளித்து வந்தது. இதனால் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஈரான் ராணுவ அதிகாரிகள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் 2 பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியிருந்தது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.