தினசரி வாழ்க்கையில் ஆண்கள் சாதாரணமாகச் செய்கிற சில விஷயங்கள், அவர்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து குழந்தையின்மை பிரச்னையை ஏற்படுத்தலாம் என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ், அதுகுறித்து விளக்கமாகப் பேசினார்.
தொடர்ந்து பல வருடங்கள், நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டும்போதும் அல்லது பைக் ஓட்டும்போதும், சம்பந்தப்பட்ட ஆண்களுடைய விந்தணுக்கள் நேரடியாக பாதிக்கப்படும். ஏனென்றால், சைக்கிள் அல்லது பைக் ஓட்டும்போது நம்முடைய மொத்த உடல் எடையும், உட்காரும் இடத்தின் நடுப்பகுதியில், அதாவது ஆணுறுப்பின் மீதே விழும். இதனால் அந்தப் பகுதியில் இருக்கிற நரம்புகளும், தமனிகளும் (pudendal nerve, pudendal arteries) வெகுவாக அழுத்தப்படும். வெகுதூரம் சைக்கிளில் அல்லது பைக்கில் செல்லும்போது ஆணுறுப்பைச் சுற்றி மரத்துப்போகும் உணர்வை கிட்டத்தட்ட அனைத்து ஆண்களுமே அனுபவித்திருப்பார்கள்.
இதற்குக் காரணம், அந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவதுதான். இதனால், ஆண்மைக்குறைவும் வரும்; விந்தணுக்கள் குறைவும் ஏற்படும். சைக்கிள் மற்றும் பைக்கின் இருக்கையில்தான் (saddle seat) இந்தப் பிரச்னை வரும். இதுவே கார்களின் இருக்கையால் (bucket seat) இந்தப் பிரச்னை வராது. எனவே, நீண்ட தூரம் சைக்கிள் மற்றும் டூ விலரில் பயணம் செல்வதை குழந்தையில்லாதவர்கள் தவிர்ப்பதே நல்லது.
இதேபோல, ஜீன்ஸ் பேன்ட்டும் விந்துப்பைகளை பாதிக்கும். ஜீன்ஸ் மெட்டீரியல் உடலின் வெப்பத்தை வெளிவிடாது. குளிர்மிகுந்த நாடுகளுக்கு ஜீன்ஸ் பேன்ட் ஓகே. ஆனால், இந்தியா போன்ற வெப்பம் அதிகமான நாடுகளில், வெப்பத்தை அதிகரிக்கிற மற்றும் வெப்பத்தை வெளியேற்றாமல் இருக்கிற உடைகளை அணிந்தால், விந்துப்பைகள் அவை இருக்க வேண்டிய 35 டிகிரியிலிருந்து 37 டிகிரி வெப்பநிலைக்கு அதிகரித்துவிடும். இதனால், விந்தணுக்கள் உற்பத்தி குறைய ஆரம்பிக்கும்.
கூடவே, இறுக்கமான உள்ளாடையும் சேர்ந்து கொண்டு, அதிகமாக வியர்க்கும். இதனால், தொடைப்பகுதிகளில் பூஞ்சைத்தொற்று ஏற்படும். விந்துப்பை மீது கொப்புளங்களும் ஏற்படும். அதனால், ஜீன்ஸ் பேன்ட்டை தவிர்த்துவிட்டு, தளர்வான காட்டன் பேன்ட்டுகளை அணிந்து கொள்ளுங்கள். உள்ளாடைகளும் விந்துப்பைகளை நசுக்காமல், அவற்றைத் தாங்கிப் பிடிக்கும்வண்ணம் இருந்தாலே போதும். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் மட்டுமல்லாமல், திருமணமாகாத இளைஞர்களும் ஜீன்ஸ் பேன்ட்டை தவிர்ப்பது நல்லது” என்கிறார் டாக்டர் காமராஜ்.