கேரள மாநிலம், கொச்சி வைற்றிலா பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவரின் அப்பா, 75 வயது ஆன சண்முகம். கடந்த 3 ஆண்டுகளாக படுக்கை நோயாளியாக உள்ள சண்முகத்துக்கு, உணவு, தண்ணீர் போன்றவற்றை யாராவது கொடுத்தால் மட்டுமே சாப்பிட முடியும். இயற்கை உபாதைகளை படுக்கையிலேயே கழித்து வந்தார்.
அஜித், கடந்த 10 மாதங்களாக திருப்பூணித்துறை அருகே எரூரில் தன் மனைவி, குழந்தைகள் மற்றும் தந்தை சண்முகத்துடன் வாடகை வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் தினம் வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு விட்டு வீட்டை காலி செய்த அஜித், தந்தை சண்முகத்தை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
நேற்று, அக்கம்பக்கத்தினர், வீட்டு உரிமையாளரான சுனிலுக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவித்தனர். திருப்பூணித்துறை போலீஸ் உதவியுடன் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார் சுனில். அங்கு, சண்முகம் இரண்டு நாள்களாகக் குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காத நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுக்கப்பட்டது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள் அங்கு சென்று சண்முகத்தின் டயபர் மற்றும் சிறுநீர் சேரும் பை ஆகியவற்றை மாற்றினர். அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டதால், உடனடியாக திருப்பூணித்துறை அரசு தாலுகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தந்தையை இரக்கமே இல்லாமல் கைவிட்டு, வாடகை வீட்டில் வைத்துப் பூட்டிச்சென்ற மகனின் செயல் அப்பகுதியினரை வருத்தமடையச் செய்தது.
இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சுனில் கூறுகையில், “வீட்டை காலிசெய்துவிட்டுச் சென்றபோது அனைத்துப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ள மகன் அஜித், படுக்கை நோயாளியான தந்தையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அக்கம்பக்கத்தினர் எனக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து நான் இங்கு வந்து பார்த்தேன். அஜித்தை போனில் அழைத்தபோது, வேளாங்கண்ணிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார். தன் சகோதரிகள் வந்து தந்தையை அழைத்துச் செல்வார்கள் எனக் கூறினார். ஆனால், யாரும் வரவில்லை” என்றார்.
இந்த நிலையில், தந்தையை கைவிட்ட மகன் அஜித் மீது திருப்பூணித்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருப்பூணித்துறை போலீஸ் தரப்பில் கூறுகையில், “அடிப்படை தேவைகளைக் கூட சுயமாக செய்யமுடியாமல் படுத்த படுக்கையாகக் கிடந்த தந்தையை கைவிட்டுச் சென்றது மகன் செய்த தவறு. உணவு கொடுக்காமல் இருந்தது, சிகிச்சை வழங்காமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் அஜித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்” என்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சண்முகத்துக்குத் தேவையான சிகிச்சை வழங்கப்படும், சிகிச்சைக்காக திருப்பணித்துறை தாலுகா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு சமூக நலத்துறை ஊழியர்கள் உதவுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.