தெலுங்கு திரையுலகில் நடிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாக நடிகை சம்யுக்தா தெரிவித்திருக்கிறார்.
2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான `பாப்கார்ன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. தமிழில் `களரி’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு மற்றும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தின் மூலம்தான் அதிகளவில் கவனம் பெற்றார். `அய்யப்பனும் கோஷி’-யும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பீம்லா நாயக்’ படத்தில் பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதியுடன் இணைந்து நடித்த சம்யுக்தா மேனன் கடந்த 2023- ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘விருபாக்ஷா’ படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றார்.
இந்நிலையில், தெலுங்கு திரை உலகில் நடிப்பது தனக்கு மிகவும் சிரமமாக இருப்பதாகப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மலையாள படங்களில் நடிக்கும் போது பெரிதாக மேக்கப் தேவையில்லை. அங்கு நடிக்க எனக்கு சுதந்திரமாக இருந்தது. ஆனால், தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் போது மேக்கப் மீது அதிக கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கிறது. மேக்கப் மற்றும் ஆடைக்கே கவனத்தைச் செலுத்துவதால் நடிப்பின் மீது கவனத்தை செலுத்த முடிவதில்லை.
நான் நடிப்பில் கவனம் செலுத்தி வசனங்களை மனப்பாடம் செய்து ஷாட்டுக்கு தயாராகியிருப்பேன். அப்போது என்னுடைய சேலை சரியில்லை என காஸ்ட்யூமர் வந்து சரிசெய்வார். சொல்வதற்கு நகைச்சுவையாக இருக்கும். ஆனால் அது உண்மையில் அவ்வளவு எளிதானதல்ல.
அதனால் என் நடிப்பில் இருக்கும் கவனம் சிதறிவிடும். மலையாள சினிமாவில் மேக்அப் இல்லாமல் நடித்துப் பழகியிருந்தேன். அது தான் எனக்கு மிகவும் வசதியாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.