சென்னை: “கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து தமிழகம் வருபவர்களைக் கண்காணித்து வருவதாக” தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து தமிழகம் வருபவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த காய்ச்சலுக்கு காரணம் வெஸ்ட் நைல் கொசு. கொசுக்களில் இருந்து பரவக்கூடிய இந்த நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு, நாம் வசிக்கும் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, வீடுகளை ஒட்டி தேவையற்று தேங்கிக்கிடக்கும் தண்ணீரை அப்புறப்படுத்துவது ஆகியவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.
கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு 13 வழிகளின் வழியே, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் வருவதற்கான வழிகள் உள்ளன. அந்தப் பகுதிகளில் எல்லாம் சுகாதாரத்துறை மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது”, என்று அவர் கூறினார். முன்னதாக, உலக செவிலியர்கள் தினத்தையொட்டி, அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து தமிழ்நாடு செவிலியர் சங்கத்தினர் வாழ்த்துப் பெற்றனர்.
பின்னர் செய்தியாளார்களை சந்தித்த அமைச்சர், “திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு 1,412 ஒப்பந்தச் செவிலியர்கள் பணியிலமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே ஒப்பந்த செவிலியர்களாக இருந்தவர்களுக்கு ரூ.16,000 சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. அது ரூ.18,000 சம்பளமாக உயர்த்தப்பட்டது. அதோடு மட்டுமல்லாது ஒப்பந்த செவிலியர்களாக மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல ஆண்டு காலமாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருந்தார்கள். திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
‘மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற ஒரு மகத்தானத் திட்டம் தொடங்கப்பட்டதற்குப் பிறகு பெண் சுகாதார தன்னார்வலர்கள் 10,969 பேர் நியமிக்கப்பட்டார்கள். நியமிக்கப்பட்டதற்குப் பிறகு பகுதி நேரப் பணியாளர்கள் என்ற வகையில் அவர்களுக்கு சம்பளம் என்று சொல்வதைக் காட்டிலும் ஊக்கத் தொகை உயர்த்தப்பட்டு, ரூ.5,500 ரூபாய் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள்.
செவிலியர்களின் பணியிடமாற்றம் என்பது பல ஆண்டுகளாக குழப்பமாக, குளறுபடியாக இருந்தது. அதற்குத் தீர்வு காண்கிற வகையில் திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 9,535 செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் அவரவர்கள் விரும்புகிற பணியிடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். எம்.ஆர்.பி. மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிற பணி நியமனங்கள் வெளிப்படைத் தன்மையோடு நியமனம் செய்யப்படுகிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னாள் கிராம சுகாதார செவிலியர்கள், வி.எச்.என். 2,400 பேர் பணியமர்த்தப்படுகிற பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
செவிலியர் சங்கத்தின் சார்பில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே அவர்கள் தமிழக அரசுக்கு வைத்தக் கோரிக்கை சிறந்த செவிலியர்களுக்கு அவர்களை ஊக்கமளிக்கிற வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்திருந்தார்கள். அந்த கோரிக்கையையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி இன்றைக்கு 19 செவிலியர்களுக்கு விருதுகள் வழங்குகிற தேர்வுக்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு அந்த விருதுகள் வழங்கப்படும்.” என்று கூறினார்.