வேலையிலும் வாழ்விலும் சமநிலை வேண்டும். ஆனால், இங்கு பலருக்கும் வாழ்வே வேலையாகத்தான் இருக்கிறது. இவர்கள் கூடிய விரைவிலேயே மனதையும் உடலையும் கெடுத்துக் கொண்டு, சம்பாதித்த பணத்தை மருத்துவமனைக்குச் செலவு செய்வார்கள்.
இதனால் ஓவர் டைம் வேலை பார்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு நேரெதிராக சில நிர்வாகிகள் பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு.
அந்தவகையில் சீனாவின் மிகப்பெரிய இணைய நிறுவனமான பைடுவின் (Baidu) துணைத் தலைவரும், மக்கள் தொடர்புத் துறையின் தலைவருமான க்யூ ஜிங் (Qu Jing) கடினமான வேலை கலாசாரத்தைப் பெருமையாகப் பேசி நான்கு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோக்களில் நீண்ட பிஸினஸுக்காக பயணம் செல்ல மறுக்கும் ஊழியர்கள் குறித்து விமர்சித்துள்ளார். `ஊழியர்கள் அழுகிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டிய கடமை எனக்கு இல்லை…’ “நீங்கள் பப்ளிக் ரிலேஷன்ஸில் பணிபுரிகிறீர்கள் என்றால், வார இறுதி நாள்களை எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் மொபைலை 24 மணி நேரமும் ஆன் செய்து வைத்திருங்கள். எப்போதும் பதிலளிக்கும் வகையில் தயாராக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
அதோடு தனக்குக் கீழ் பணிபுரிபவர்கள் தனது நிர்வாகத்தைப் பற்றிப் புகார் செய்தால் அவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்று மிரட்டினார். “இந்தத் துறையில் உங்களுக்கு வேலை கிடைப்பதை என்னால் சாத்தியமற்றதாக்க முடியும்’’ என்றார்.
அவர் பேசிய தொனியும், சக ஊழியர்கள் மீதான அவரின் நிலைப்பாடும், அலட்சியமும் பச்சாதாபமின்மையும் மோசமானதாக இருந்தது. இவர் பேசியுள்ள வீடியோக்கள் வைரலானதோடு, கடுமையான விமர்சனங்களையும் பெற்றது.
பரவலான மக்களின் கோபத்துக்குப் பிறகு, அவர் வெளியிட்ட நான்கு வீடியோக்களையும் நீக்கி மன்னிப்பு கோரியுள்ளார். தனது வீடியோக்கள் பைடுவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்றும், அவற்றை வெளியிடுவதற்கு முன் நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்றும் கூறினார்.
அதோடு `பல்வேறு தளங்களில் இருந்து வந்த அனைத்து கருத்துகளையும் நான் கவனமாகப் படித்தேன். மேலும், பல விமர்சனங்கள் மிகவும் பொருத்தமானவை. நான் அதை ஆழ்ந்து சிந்திக்கிறேன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று சீனாவின் பிரபல சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.