இந்தியாவின் மிகப்பெரிய பைக் தயாரிப்பாளர்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ அதிகப்படியான மைலேஜ் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் 5 முதல் 6 சிஎன்ஜி பைக்குகளை 18 மாதங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.
வரும் ஜூன் 18 ஆம் தேதி முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் நடப்பு ஆண்டில் மேலும ஒரு சிஎன்ஜி பைக் கொண்டு வரவும், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்தமாக 5 முதல் 6 பைக்குகளை இந்திய சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாக பஜாஜ் தெரிவித்துள்ளது.
முதலில் வெளியிடப்பட உள்ள பைக் மட்டுமே சற்று விலை குறைவானதாக இருக்கலாம். அதனை தொடர்ந்து வெளியிடப்பட உள்ள மற்ற மாடல்கள் பிரீமியம் பைக்குகளுக்கு இணையான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பஜாஜின் தலைவர் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டு வருவது, தற்பொழுது விற்பனையில் உள்ள அதிக மைலேஜ் தருகின்ற பெட்ரோல் பைக்குகளை விட கூடுதலாக 50 % வரை மைலேஜ் தரக்கூடும் என தெரிவித்துள்ளார். எனவே பஜாஜ் சிஎன்ஜி பைக் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு நிச்சயமாக 100 கிலோமீட்டருக்கு கூடுதலான மைலேஜ் வழங்கலாம்.
முதல் மாடலின் வெளியிட்டுக்குப் பிறகு ஆரம்ப மாதங்களில், மாதந்திரம் 20,000 CNG பைக்குகளை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சந்தை தேவை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி திறனை அதிகரிக்கவும் பஜாஜ் திட்டமிட்டுள்ளது.