சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ஆடப்போகும் கடைசி லீக் போட்டி இது.
தோனிக்கு சேப்பாக்கத்தில் இந்த போட்டி கடைசிப் போட்டியாக இருக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும், தோனி இந்தப் போட்டியில் தனது ஓய்வை அறிவிப்பார் என்றும் அனுமானங்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், போட்டிக்கு முன்பான டாஸில் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் பேசியவை இங்கே.
டாஸை தோற்று சேஸிங் செய்யும் சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் பேசுகையில், ‘ஈரப்பதத்தின் தாக்கம் பெரிதாக இருக்காது என்பதால் நான் டாஸை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. முதலில் பேட் செய்தாலும் சரி பௌலிங் செய்தாலும் சரி அதனால் பெரிய மாற்றம் இருக்கப்போவதில்லை. பிட்ச்சும் போட்டி முழுவதுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கப்போகிறது. ஒரு அணியாக நாங்கள் எந்தெந்த இடங்களில் முன்னேற வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்திருக்கிறோம். இந்த மாதிரியான மைதானங்களில் ஆட மனதளவில் தயாராக இருக்க வேண்டும். எங்கள் மீது நம்பிக்கை வைத்து திடகாத்திரமாக ஆட விரும்புகிறோம்.
எல்லா போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். எங்கள் அணி இப்போது ஒருவித பேலன்ஸூடன் இருக்கிறது. நானும் ரச்சின் ரவீந்திராவும் ஓப்பனிங் இறங்குவோம். டேரில் மிட்செல் நம்பர் 3 இல் களமிறங்கவிருக்கிறார். சேப்பாக்கத்தில் இதுவரை நன்றாக ஆடியிருக்கிறேன். இன்றும் நன்றாக ஆடுவேன் என்ற நம்பிக்கையிருக்கிறது.’ என்றார்.
டாஸில் ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் தோனி பற்றி எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. மேலும், பார்மிலேயே இல்லாமல் வாய்ப்பு மேல் வாய்ப்பு வழங்கப்பட்ட ரஹானே இந்தப் போட்டியில் ட்ராப் செய்யப்பட்டிருக்கிறார்.
ரஹானே அணியில் இல்லாதது பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.