IPL 2024 CSK Play-off Scenario : CSK, RCB, DC மூன்று அணிகளும் டாப் 4ல் இடம்பெற முடியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  மே 10 ஆம் தேதி நடந்த ஐபிஎல் 2024 லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியல் சுவாரஸ்யமான திருப்பங்களுக்கு சென்றது. அதாவது, இப்போது பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளை தவிர மற்ற எல்லா அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டும் முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்திருக்கும் நிலையில் எஞ்சிய மூன்று இடங்களுக்கு 7 அணிகள் போட்டியில் இருக்கின்றன. 

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் இருந்தாலும், சென்னை ரன்ரேட் அடிப்படையில் முன்னால் இருக்கிறது. ஆர்சிபி அணி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது அந்த அணி. இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போட்டி மாலை 3.30 மணிக்கும், டெல்லி கேப்பிட்டஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு இடையிலான போட்டி இரவு 7.30 மணிக்கும் நடைபெறுகிறது.

இந்த இரண்டு போட்டிகளும் ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் மிக முக்கிய போட்டிகளாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்வதுட்டன் புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களுக்கான போட்டியில் இருக்கும். சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். இரண்டாவது போட்டியில் எந்த அணி தோற்றாலும் ஐபிஎல் 2024 சீசனுக்கான பிளே ஆப் வாய்ப்பை முற்றிலுமாக இழக்கும். அதனால், ஆர்சிபி – டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இப்போதைய சூழலில் டெல்லி, ஆர்சிபி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் போட்டிக்கு முன்னேற இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம். 

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு சாம்பியனான CSK, NRR (+0.491) உடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் எதிர்கொள்ள உள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாவதுடன் ரன்ரேட்டும் அதிகரிக்கும். சென்னை அணி தனது இரண்டு ஆட்டங்களிலும் தோற்றால், அவர்கள் 12 புள்ளிகளுடன் போட்டியிலிருந்து வெளியேறுவார்கள். 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ரிஷப் பந்தின் DC தற்போது 12 புள்ளிகள் மற்றும் NRR (-0.316) உடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த அணி மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த அணி இன்று ஆர்சிபி அணிக்கு எதிராகவும், அடுத்த போட்டியில் எல்எஸ்ஜிக்கு எதிராகவும் விளையாட உள்ளன. டிசி இரண்டிலும் வெற்றி பெற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் ஏதேனும் ஒரு போட்டியில் தோற்றால் டெல்லி அணி பிளே ஆஃப் செல்லும். ஒரு போட்டியில் வென்று, சிஎஸ்கே இரண்டிலும் தோற்றால் எல்எஸ்ஜி அணி ஒரு போட்டியில் தோற்க வேண்டும். இரண்டிலும் டெல்லி தோற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு இல்லை. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மற்ற இரண்டு அணிகளுடன் ஒப்பிடும்போது ஆர்சிபி அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு என்பது மிகவும் கடினமாக தான் இருக்கிறது. ஏனென்றால் ஆர்சிபி அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட 14 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடியும்.  இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை தோற்க வேண்டும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தோற்க வேண்டும், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தோல்வியை சந்திக்க வேண்டும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை சந்திக்க வேண்டும். இப்படியான சூழல் அமைந்தால் ஆர்சிபி அணி பிளே ஆப் செல்லும். ஒருவேளை எல்எஸ்ஜி, ஆர்சிபி அணிகள் தலா 14 புள்ளிகளுடன் இருக்கும் நிலை வந்தால் நெட் ரன்ரேட் அடிப்படையில் முன்னால் இருக்கும் அணி பிளே ஆஃப் செல்லும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.